சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி...! ரூ.4800 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உட்பட பல முக்கிய அறிவிப்புகள்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அடுத்தடுத்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, நகர்ப்புற சாலை வசதிகள், பூங்காக்கள், பள்ளி உள்கட்டமைப்பு, போக்குவரத்து சேவைகள் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் என பல்வேறு அம்சங்கள் இந்த அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளன.

வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும் நிலையம் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். மேலும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.300 கோடி செலவிடப்படும்.சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்திறனை அதிகரிக்க ரூ.410 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மதுரை மாநகராட்சியில் சுமார் 40 ஆண்டுகளாகப் பழமையான பாதாளச் சாக்கடை அமைப்பை சீரமைக்க, முதற்கட்டமாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் தொடங்கப்படும்.நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும்.திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த இரண்டு திட்டங்களும் மொத்தம் ரூ.547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சாலைகளை சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், 105 சாலை சந்திப்புகளும் சீரமைக்கப்படும்.இந்தப் பணிகளுக்கு ரூ.110 கோடி ஒதுக்கப்படும். பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக ரூ.275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் பசுமை வசதிகளை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்கள் பங்களிப்புடன் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும்.திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய அளவிலான பூங்காக்கள் ரூ.130 கோடி செலவில் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ.175 கோடி செலவில் உருவாக்கப்படும்.

இதற்காக மொத்தம் ரூ.305 கோடி செலவிடப்படும்.பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல், நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகள் ரூ.335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்தும் வகையில், கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளும் நவீன முறையில் சீரமைக்கப்படும்.

இந்த வீதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளை தரைக்கு அடியில் கொண்டு செல்லும் பணிகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளிக் கடற்கரை வரை ரூ.8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி செலவிடப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும்.ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே மின்னணு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

புதிய வாகனம் வாங்குவோர் மின்னணு பதிவு சான்றிதழை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் இந்த வசதி செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.போக்குவரத்து தொடர்பான அனைத்து அலுவலகச் சேவைகளையும் ஒருவர் இருக்கும் இடத்திலிருந்தே பெறும் வகையில், பதிவு மற்றும் உரிமம் வழங்கும் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் விரைவு மறுமொழிக் குறியீட்டை பயன்படுத்தி மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படும்.இந்த முறையின் மூலம் ஆவணங்கள் தொலைந்தாலும் அல்லது சேதமடைந்தாலும், அவற்றை மீண்டும் பதிவிறக்கம் செய்து தேவையான நேரத்தில் அச்சிட்டு பயன்படுத்த முடியும்.கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளை மதிக்கும் வகையில், முந்தைய ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.அதேபோல், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, விமான நிலையத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது முந்தைய ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மனிதநேயத்தையும் ஜனநாயக உரிமைகளையும் கருத்தில் கொண்டு அந்த வழக்குகளை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay takes action under Rule 110 Assembly Many important announcements including 4800 crore seawater desalination project


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->