உபரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் தடை..!
ChennaiHC stayed on TNgovt decision to transfer surplus teachers
தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவில் ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஜூலை மாதத்திக்குள் இறுதி செய்து அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கால நிர்ணயம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்வதற்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 23ஆம் தேதி அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டிருந்தது.
அந்த அரசாணையை எதிர்த்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

தனியார் பள்ளி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஒரு பள்ளி குழுமம் நடத்தும் பள்ளியில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் அதே குழுமம் நடத்தும் மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய முடியும் எனவும், பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய கால நிர்ணயத்தை பின்பற்றாமல் மனுதாரர்கள் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்காமலும் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வியாண்டு முடியும் தருவாயில் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பள்ளிகள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி பள்ளிகளின் ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளாமல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணை உத்தரவுக்கு இடைக்கால தலைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
ChennaiHC stayed on TNgovt decision to transfer surplus teachers