சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி...! கோயம்பேட்டில் வெங்காயம் கிலோ ரூ.50... தக்காளி, உருளையும் விலை உயர்வு...!
Chennai residents shocked Onion costs 50 per kg Koyambedu Tomato and potato prices increase
சென்னையின் அன்றாட காய்கறி தேவையைத் தாங்கி நிற்கும் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் வரத்து குறைந்ததால் முக்கிய காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களில் கணிசமாக அதிகரித்து, கிலோ ரூ.50-ஐ எட்டியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாக விளங்கும் சென்னை கோயம்பேடு சந்தை, சென்னை மட்டுமின்றி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய மையமாக உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், தினமும் இரவு நேரங்களில் கோயம்பேடு சந்தைக்கு வந்து காய்கறிகளை மொத்த விலையில் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் அதிகாலைக்குள் தங்களது கடைகளுக்கு அவற்றை கொண்டு சென்று பொதுமக்களின் அன்றாட தேவைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கோயம்பேடு சந்தைக்கு உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி மற்றும் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதால் வடமாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளது.இதன் தாக்கமாக மொத்த சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக தினமும் 70 முதல் 80 லாரிகளில் வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வரத்து சுமார் 50 லாரிகளாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனால் கடந்த 7-ந்தேதி கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், படிப்படியாக விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் விலையும் வரத்து குறைவு காரணமாக அதிகரித்துள்ளது. இவற்றின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கோயம்பேடு சந்தையில் நேற்று நிலவிய காய்கறிகளின் மொத்த விலை விவரம்:
வரி கத்திரிக்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை, முட்டைகோஸ் ரூ.20 முதல் ரூ.25 வரை,புடலங்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை, நாட்டு தக்காளி ரூ.18 முதல் ரூ.25 வரை, நவீன் தக்காளி ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.35 வரை, கேரட் ரூ.50 முதல் ரூ.70 வரை, பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.80 வரை, பீட்ரூட் ரூ.50 முதல் ரூ.60 வரை, வெண்டைக்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை, நாட்டு கத்திரிக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை, பாகற்காய் ரூ.40 முதல் ரூ.50 வரை, சுரைக்காய் ரூ.15 முதல் ரூ.25 வரை, முருங்கைக்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை, சேனைக்கிழங்கு ரூ.30 முதல் ரூ.40 வரை, பச்சை மிளகாய் ரூ.50 முதல் ரூ.60 வரை, இஞ்சி ரூ.90 முதல் ரூ.180 வரை, பூண்டு ரூ.130 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.காய்கறிகளின் வரத்து நிலவரத்தை பொறுத்து வரும் நாட்களில் விலையில் மேலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai residents shocked Onion costs 50 per kg Koyambedu Tomato and potato prices increase