தென்காசி அகழாய்வில் அசத்தல் கண்டுபிடிப்பு...! கி.பி. 5-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு...! - Seithipunal
Seithipunal


தென்காசி கரிவலம்வந்தநல்லூர் அருகே நடைபெற்று வரும் அகழாய்வில், சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை பறைசாற்றும் அரிய நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த கல்வெட்டு, பழந்தமிழ் எழுத்துகள் வட்டெழுத்தாக உருமாறிய காலகட்டத்தைச் சேர்ந்த முக்கிய தொல்லியல் சான்றாக அமைந்துள்ளது.

கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின்போது பழங்கால பானைகள், தாழிகள், இரும்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு தொன்மையான பொருட்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழாய்வின் முக்கிய கண்டுபிடிப்பாக, படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்ட சங்க கால செங்கல் கிணறு சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த கிணற்றுக்குள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, பழமையான நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த நடுகல், அக்கால மக்களின் வாழ்க்கை, சமூக அமைப்பு மற்றும் எழுத்து வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.நடுகல் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள எழுத்துகளை கூர்ந்து ஆராயும்போது, பழங்கால தமிழி எழுத்துகள் படிப்படியாக வட்டெழுத்தாக உருமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாக தெரியவருகிறது.

இதனால், தமிழ்நாட்டில் எழுத்து வடிவங்கள் வளர்ச்சியடைந்த விதத்தை ஆராய்வதற்கும் இந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது.கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல் சுமார் 1 மீட்டர் நீளமும், 0.30 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் “கருக்கண்”, “சுளகன்”, “நன்னங்”, “கொடியன்” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் எத்திஸ் குமார், அகழாய்வு துணைப் பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் தெரிவித்ததாவது,“தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள வாசகங்களை உற்று நோக்கும்போது, ‘கருக்கண்சுளகன் மகன் நன்னங்கொடியன்’ என்பவருக்காக இந்த நடுகல் அமைக்கப்பட்டிருக்கலாம் என பொருள் கொள்ள முடிகிறது.

கல்வெட்டில் இடம்பெற்றுள்ள எழுத்துகளின் வடிவம், சொற்களின் அமைப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு நிறைவடைந்த பிறகு, நடுகல் தொடர்பான மேலும் பல வரலாற்றுத் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

மலையடிப்பட்டி அகழாய்வில் கிடைத்து வரும் ஒவ்வொரு தொல்லியல் சான்றும் அப்பகுதியின் தொன்மையையும், பழந்தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு மரபையும் அறிந்து கொள்ள புதிய தகவல்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amazing discovery Tenkasi excavation 5th century AD Middle Stone Inscription Unearthed


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->