"சென்னை ஒன் செயலி.. இனி ஒரு டிக்கெட் எடுத்தால் போதும்..பஸ், ரயில், மெட்ரோவில்..எளிதாக பயணிக்கலாம்!
Chennai One app Now you just need to buy one ticket you can travel easily by bus train metro
சென்னையில் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்காக ஒரு புதிய வசதி இன்று அறிமுகமாகிறது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) உருவாக்கிய ‘Chennai One – சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலியை, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்தச் செயலியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
மெட்ரோ ரயில், புறநகர் ரயில், MTC பேருந்து – மூன்றையும் ஒரே பாஸ், ஒரே டிஜிட்டல் டிக்கெட் மூலம் பயன்படுத்த முடியும். இனி பயணிகள் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலி அல்லது கார்டுகளை வைத்திருக்கும் அவசியம் இல்லை.
செயலியில் சுமார் 6,000 பேருந்து நிறுத்தங்கள், 650 பேருந்து வழித்தடங்கள், 3,500 பேருந்துகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. டிக்கெட் முறை இந்திய ரயில்வேயின் UTS அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் புறநகர் ரயிலுக்கான டிக்கெட் கூட இதில் எளிதாகக் கிடைக்கும்.
சென்னையில் தினமும் சுமார் 47 லட்சம் மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதில் 35 லட்சம் பேர் MTC பேருந்துகளை, 9 லட்சம் பேர் புறநகர் ரயில்களை, 3 லட்சம் பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்துகிறார்கள். இத்தனை பேருக்கு பயணத்திட்டம், கட்டண ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்தையும் ஒரே செயலியில் கொண்டு வருவது மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இது இந்தியாவில் முதல்முறையாக முழுமையான ஒருங்கிணைந்த MaaS (Mobility as a Service) தளம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.மும்பை, பெங்களூரில் உள்ள ஒருங்கிணைந்த டிக்கெட் முறைகள் பேருந்து மற்றும் மெட்ரோவுக்குள் மட்டுமே சிக்கியிருக்கும் நிலையில், சென்னை தனது சேவையை மேலும் விரிவுபடுத்தி நாட்டில் முன்னோடியாகிறது.
போக்குவரத்து ஆர்வலர்களின் கருத்து: “டிஜிட்டல் டிக்கெட் வசதி மிகச் சிறந்த முன்னேற்றம் தான். ஆனால் பொதுவான கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் பயணிகள் அதிக அளவில் ஈர்க்கப்படுவார்கள்” என்பதாகும்.
மொத்தத்தில், ‘சென்னை ஒன்’ செயலி, சென்னையில் பொதுப் போக்குவரத்து அனுபவத்தை எளிமையாக்கி, வேகமாகவும் மலிவாகவும் மாற்றும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
English Summary
Chennai One app Now you just need to buy one ticket you can travel easily by bus train metro