மதுரையில் முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு: கடும் வெயில், நெரிசலால் 15க்கும் மேற்பட்டோர் மயக்கம் - ஆம்புலன்ஸ் பாதையை மறித்த கான்வாய்!
Chaos at CM Vijay Madurai Event Over 15 Faint Due to Heat and Crowd Push Ambulances Blocked Outside GRH
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் (GRH) 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். இத்திட்டத் தொடக்க விழாவைக் காண்பதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே குவிந்தனர்.
கடும் வெயிலும் தள்ளுமுள்ளுவும்:
நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளுக்குப் (Barricades) பின்னால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைக்கப்பட்டனர். போதிய குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் கடும் தாகத்துடனும் அசெளகரியத்துடனும் தவித்தனர். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்கு வருகை தந்தபோது அவரை நெருங்கிப் பார்க்கக் கூடியிருந்த கூட்டத்தினரிடையே கடும் தள்ளுமுள்ளுவும் நெரிசலும் ஏற்பட்டது. வெயிலின் தீவிரத்தாலும் நெரிசலாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கிச் சுருண்டு விழுந்தனர்.
ஆம்புலன்ஸ் போக்குவரத்தும் பரபரப்பும்:
மயக்கமடைந்தவர்களை அங்கிருந்த காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்குள்ளேயே அனுமதித்தனர். இதனிடையே, முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் அனைத்தும் மருத்துவமனை முன்பாகச் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்ததால், அவசரப் பிரிவுக்கு நோயாளிகளை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் வழியிலேயே ஸ்தம்பித்து நின்றன. முதலமைச்சர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புறப்பட்ட பிறகே, தடுப்புகளுக்குள் சிக்கித் தவித்த பொதுமக்கள் பேரிக்காடுகளை ஏறிக் குதித்து வெளியேறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Chaos at CM Vijay Madurai Event Over 15 Faint Due to Heat and Crowd Push Ambulances Blocked Outside GRH