ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: அலுவலகம், வீடுகளில் சிசிபி அதிரடி சோதனை; முக்கியப் புள்ளியின் மகனுக்கு 'லுக்-அவுட்' நோட்டீஸ்!
CCB Raids Gem Granites Office Founders Home in POCSO Case Lookout Notice Issued Against Union Leaders Son
தமிழகத்தையே உலுக்கியுள்ள ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் ராயப்பேட்டையில் உள்ள நிறுவனத் தலைமையகம் மற்றும் ஆர்.கே.சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள காவல் துறையினர், தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்க (SRMU) பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதால், அவருக்கு எதிராகப் 'லுக்-அவுட்' (Lookout Notice) நோட்டீஸையும் பிறப்பித்துள்ளனர்.
வழக்கின் பின்னணியும் நீதிமன்றக் கண்டனமும்:
கடந்த 2025 அக்டோபரில் குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் மற்றும் பென்-டிரைவ் (Pen-drive) ஆதாரங்கள் மூலமே வீரமணியின் பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. தேனாம்பேட்டையில் தனியாக வீடு எடுத்து, ஏழ்மையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்குப் பணம் மற்றும் பரிசுகள் ஆசைகாட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
ஆரம்பத்தில், '2019-ல் பதிவான வீடியோவில் உள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை' எனக் கூறி 2026 பிப்ரவரியில் வழக்கை மூடக் காவல் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி கடுமையாகக் கண்டனம் தெரிவித்து, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத் தலையீட்டைத் தொடர்ந்தே இவ்வழக்கில் வீரமணி, அவரது உதவியாளர்கள் சாந்தி, மகேந்திர சிம்கன் மற்றும் ரகசிய வீடியோக்களை வைத்து மிரட்டிப் பணம் பறித்த முன்னாள் ஊழியர் கணேசன் ஆகியோர் அடுத்தடுத்து கைதாகினர்.
அமைச்சரின் குற்றச்சாட்டும் தற்போதைய நிலையும்:
இவ்வழக்கு தொடர்பாகப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "முந்தைய ஆட்சியில் இவ்வழக்கை முற்றிலுமாக கைவிட பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது. தற்போது முதலமைச்சர் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பில் தவெக அரசு நேர்மையான விசாரணையை நடத்தி வருகிறது" எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, வீரமணி மற்றும் அவரது மகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கைதான உதவியாளர் சாந்தி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், வழக்கின் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையைச் சிறப்புப் படை காவல் துறையினர் விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
English Summary
CCB Raids Gem Granites Office Founders Home in POCSO Case Lookout Notice Issued Against Union Leaders Son