போலீசார் விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வழக்கு: இன்று விசாரணை தொடங்கிய சி.பி.ஐ...!
CBI begins investigation into Madapuram Ajith Kumar case today
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவ அஜித்குமார் மீது, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். அதன் பேரில், விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம தமிழ்நாட்டை உலுக்கியது.
இந்நிலையில், விசாரணையில் கொலை செய்யப்பட்ட காவலர் அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தொடங்கியுள்ளது. கோயில் பசு மடத்தில் வைத்து அஜித்குமாரை தனிப்படை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய போலீசார் 05 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித் குமார் தலைமையிலான 06 பேர் கொண்ட குழு அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்காக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து மாவட்ட நீதிபதியின் விசாரணை அறிக்கை மற்றும் வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.
அதிகாரிகள் இன்று சம்பவம் நடந்த கோவில் பசுமடம், பார்க்கிங், திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன், எஸ்.பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., ஆகியோரும் விசாரணைக்குழுவிடம் உரிய விளக்கங்களை அளித்துள்ளனர்.
English Summary
CBI begins investigation into Madapuram Ajith Kumar case today