காங்கிரஸுக்கு ‘பை பை’... திமுகவுக்கு ‘வெல்கம்’...! அதிரடி முடிவெடுத்த அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீநிதி...!
Bye bye Congress Welcome to DMK All India Congress Committee executive Srinidhi takes drastic decision
அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளராக செயல்பட்டு வந்த ஶ்ரீநிதி, இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இந்த அரசியல் மாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஶ்ரீநிதி கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த அவர், தற்போது திமுக பயணத்தை தொடங்கியுள்ளார்.இந்த நிகழ்வில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆ.ராசா எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து திமுகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து ஶ்ரீநிதி விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்குள் நீண்ட காலமாக நிலவி வரும் உட்கட்சி முரண்பாடுகள் மற்றும் குழப்பமான அரசியல் சூழ்நிலை காரணமாக, தொகுதி மக்களுக்காக சுதந்திரமாகவும் முழுமையாகவும் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பெண் தலைவர்கள் அரசியலில் முன்னேறுவதைக் சில காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்பாத மனநிலை நிலவுகிறது.
இது அரசியல் வளர்ச்சிக்கும், பெண்களின் தலைமைத்துவ முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ளது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.ஶ்ரீநிதியின் இந்த திடீர் அரசியல் முடிவு, காங்கிரஸ் மற்றும் திமுக வட்டாரங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bye bye Congress Welcome to DMK All India Congress Committee executive Srinidhi takes drastic decision