பனியன் தொழிலாளர்களா? மறைமுக தீவிரவாதிகளா? - திருப்பூரில் பதுங்கிய 6 வெளிநாட்டு நபர்கள் கைது....!
Banyan workers Secret terrorists 6 foreigners arrested hiding Tiruppur
டெல்லி கியூ பிராஞ்ச் காவல் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சந்தேகத்துக்குரிய பதிவுகள் வெளியாகி வருவதை கண்காணிக்கும் போது, அவை திருப்பூர் பகுதிகளில் இருந்து செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக திருப்பூருக்கு விரைந்த அதிகாரிகள், நகர மற்றும் மாவட்ட காவலர்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்களாக தீவிர ரகசிய கண்காணிப்பு மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில், ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதிகளில் சிலர் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிகாலை மேற்கொண்ட திடீர் சோதனையில் ஊத்துக்குளியில் 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர். அவர்கள் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் வங்காளதேசத்தைச் சேர்ந்த மிஜனூர் ரஹ்மான், முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் ஆகியோர் என தெரியவந்தது.
இந்த தொழிலாளர்கள் போல திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் வேலை பார்த்துக்கொண்டே, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிர்ந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர்கள் திருப்பூருக்கு வந்ததன் உண்மையான நோக்கம் என்ன, ஏதேனும் சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லிக்கு அழைத்து செல்லும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் விசாரணையில் பயங்கரவாத தொடர்புகள் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தொழிலாளர்களாக வந்து தங்கியிருக்கும் வெளிநாட்டு நபர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Banyan workers Secret terrorists 6 foreigners arrested hiding Tiruppur