தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல் யுத்தம்...! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்...! - ஜூலை இறுதியில் அதிரடித் தேதி அறிவிப்பு...!
Another election war Tamil Nadu By election August 5 constituencies Action date announced end July
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 17-வது சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிக்கொடி நாட்டி ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது. கட்சித் தலைவரான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் களமிறங்கி இரண்டிலும் வெற்றியை பதிவு செய்து அரசியல் அரங்கில் புதிய முத்திரை பதித்தார்.முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ஒரு தொகுதியை மட்டுமே தக்கவைத்துக்கொள்ளும் விதிப்படி, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், சட்டசபையில் பெரும்பான்மையை உறுதி செய்ய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு வழங்கிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில், மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது பதவிகளை துறந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதன் விளைவாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேர்தல் விதிகளின்படி காலியாகும் தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து இடைத்தேர்தலை முன்னிட்டு தேவையான அனைத்து ஆயத்தப் பணிகளையும் உடனடியாக தொடங்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.முதற்கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்ப்பு கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தேவைப்படும் துணை ராணுவப் படையினரின் விவரங்களையும் தேர்தல் ஆணையம் உள்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேநேரத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களிடம் வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேர்தல் சார்ந்த அனைத்து விவரங்களையும் தொகுத்து ஆயத்த அறிக்கையாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 22-ஆம் தேதிக்குள் அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட ஐந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்டு மாதத்தில் வாக்குப்பதிவை நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்திற்கான ஆரம்பகட்ட வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் அடுத்த முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Another election war Tamil Nadu By election August 5 constituencies Action date announced end July