கழட்டிவிடப்படும் சசிகலா, ஓபிஎஸ்! அப்ப ஒருங்கிணைந்த அதிமுக கூட்டணி - அண்ணாமலை அதிரடி பேட்டி!
ANNAMALAI SAY ABOUT ADMK AMMK SASIKALA OPS EPS
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் பதிவிலிருந்து ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து சசிகலா தலைமையில் ஒன்றிணைந்த அதிமுக எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர்.
பின்னர், அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அப்போது திடீர் திருப்பமாக, ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்த, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர் டெல்லியில் சில முக்கிய தலைவர்கள் ஆலோசனைப்படி ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இணைந்து அதிமுகவை வழிநடத்த முன் வந்தனர்.

அதன்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக இருவரும் செயல்பட்டு வந்தனர். இதற்கிடையே அதிமுகவை கைப்பற்ற டி வி தினகரன் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, டிடிவி தினகரன் தனி கட்சியை தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுகவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், சசிகலாவுக்கும் - அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்தனர்.
கடந்த வருடம் திமுகவுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் செயல்படுவதாக கூறி, ஓ பன்னீர்செல்வத்தைக் கட்சியிருந்து நீக்கியது அதிமுகவின் பொதுக்குழு. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால், ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்த ஒரு ஒருங்கிணைந்து அதிமுக செயல்பட்டதால் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதாக பாஜக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், செய்தியாளர்கள் ஒருங்கிணைந்த அதிமுக இல்லாமல் வருகின்ற மக்களவை பொதுத்தேர்தலை எதிர்கொண்டால், உங்கள் கூட்டணிக்கு சாதகமாக அமையுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "ஒருங்கிணைந்த, ஒருங்கிணைப்பு இல்லாத அதிமுக என்று சொல்லவது என்னுடைய வேலை கிடையாது.
எங்களை பொறுத்தவரை ஒரு கட்சியினுடைய தொண்டர்கள், தலைவர்கள் முடிவெடுத்து இதுதான் கட்சியினுடைய வடிவம் என்று சொல்லிய பிறகு, அதுதான் அந்த கட்சி. அது அவர்கள் முடிவெடுக்கிறார்கள். இதில் நான் யார் வெளியில் இருந்து கருத்து கூற?

இப்படி இருந்தால் தான் ஒருங்கிணைந்த அதிமுக, இப்படி இல்லை என்றால் ஒருங்கிணைந்த அதிமுக இல்லை, என்று சொல்வதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது.
எங்களின் நிலைப்பாடு, ஒரு கட்சியோடு தான் நாங்கள் கூட்டணி வைக்கிறோம். தனி மனிதரோடு கூட்டணி இல்லை என்பதுதான். இதற்கான காலமும், நேரமும் வரும்போது பேசுவோம்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை கூறிய தனி நபர் சசிகலா, ஓபிஎஸ்-யை குறிப்பதாகவும், அமமுக-அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க விரும்புவதையே அவரின் பேட்டி குறிப்பதாகவும் அரசியல் விமர்சிக்கற்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
ANNAMALAI SAY ABOUT ADMK AMMK SASIKALA OPS EPS