16 வயதினிலே முதல் இன்று வரை...! - உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் பாரதிராஜா...!
From 16 Vayathinile until today Bharathiraja hospitalized due ill health
‘16 வயதினிலே’ என்ற காலத்தால் அழியாத படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்ற நட்சத்திரங்களை ஒன்றிணைத்து, கிராமிய மணம் வீசும் புதிய சினிமா மொழியை அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை பாரதிராஜாவுக்கே உரியது. ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்–நடிகைகளின் திரைப்பயணத்திற்கு அடித்தளம் அமைத்தவர் அவர்.
‘கிழக்கே போகும் ரெயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ போன்ற பல வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் தனித்துவமான அத்தியாயத்தை எழுதியுள்ளார்.இயக்குநராக மட்டுமல்லாமல், சமீப காலங்களில் குணச்சித்திர நடிகராகவும் திரையில் தோன்றி வருகிறார்.
குறிப்பாக ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிகர் தனுஷின் தாத்தா கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், அவரது ஒரே மகனும் நடிகர்–இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா, கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானது பாரதிராஜாவை கடும் மன வேதனையில் ஆழ்த்தியது. அந்த பேரிழப்பிலிருந்து மீள முடியாமல் இருந்த அவர், சில மாதங்கள் மலேசியாவில் தனது மகள் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். பின்னர் சென்னை திரும்பினார்.
இதனிடையே, 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா தற்போது உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும், இது வழக்கமான பரிசோதனைக்காக மேற்கொள்ளப்பட்ட அனுமதிதான் என்றும் பாரதிராஜா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
From 16 Vayathinile until today Bharathiraja hospitalized due ill health