சிறை’ பார்த்தேன்… மனம் நிறைந்தது...! - மாரி செல்வராஜ் பாராட்டு
I watched Jail my heart filled satisfaction Mari Selvaraj appreciation
நடிகர் விக்ரம் பிரபு தனது திரைப்பயணத்தில் தேர்வு செய்த முக்கியமான படங்களில் ஒன்றாக ‘டாணாக்காரன்’ குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தது. அந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் வெளிப்படுத்திய தீவிரமான நடிப்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது.
அந்த வரிசையில், மீண்டும் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘சிறை’. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இந்த படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான இப்படம், தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடி வருகிறது.இந்த நிலையில், ‘சிறை’ படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“‘சிறை’ பார்த்தேன்.
மனம் நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, மனிதர்களை, அரசியலை, பிரியத்தை சினிமாவாக மாற்ற வேண்டும் என்பதைக் காட்டும் படைப்பாளிகளின் வருகை, அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையும் துணிச்சலையும் அளிக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக ‘சிறை’ வந்திருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
மேலும்,“தனது முதல் படத்திலேயே பெரிய பாய்ச்சலை நிகழ்த்திய இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, இந்தக் கதைக்காக உறுதியுடன் களமிறங்கிய விக்ரம் பிரபு, நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் தயாரித்துள்ள லலித், அறிமுக நாயகனாக நம்பிக்கை தரும் நடிப்பை வழங்கிய எல்.கே. அக்ஷய்குமார், இசையில் உயிரூட்டிய ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் நன்றியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, “இந்த ‘சிறை’க்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்ப வேண்டும்” என்றும் மாரி செல்வராஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
I watched Jail my heart filled satisfaction Mari Selvaraj appreciation