அதிரடியில் இறங்கிய அண்ணாமலை! டெல்லிக்கு பறந்த கடிதம்!
Annamalai letter to Election commission 2023
இடைத்தேர்தலில் திமுகவின் அதிகார துஷ்பிரயோக புகாரின் மீது இதுவரை மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் அந்த கடிதத்தில், "ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் திடீர் மரணத்தையடுத்து அத்தொகுதிக்கு தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. கடந்த 22 மாத கால ஆட்சியில் எந்தவிதமான மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளாத ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு இந்தத் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

கடந்த ஜனவரி 29-ம் தேதி திமுக அமைச்சர் கே.என்.நேருவும், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பணப்பட்டுவாடா தொடர்பாக பேசிக்கொள்ளும் ஆடியோவை தமிழக பாஜக வெளியிட்டது.
இந்த ஆடியோவை தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள், தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பித்து, நியாயமான நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. ஜனநாயகத்தை கொலை செய்யும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர், திருப்பூர் மாவட்ட திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் ஷர்புதீன் காரில் இருந்து பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டுச் செல்லப்பட்ட டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த வாரம், திமுகவினர் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தலா 2 கிலோ இறைச்சி விநியோகித்துள்ளனர். அதுமட்டுமின்றி திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு உறுதியாக ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். இதுதவிர தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் மீது இதுவரை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Annamalai letter to Election commission 2023