மருத்துவக் கல்வி: 27% ஓபிசி இட ஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வழக்கு..! - Seithipunal
Seithipunal


இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்தியாவில் மருத்துவக் கல்விக்கு 3 நிலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநில அரசுகளில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. உதாரணமாக தமிழகத்தில்   பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (இஸ்லாமியர்கள் உட்பட) 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  20%, பட்டியலினத்தவருக்கு (அருந்ததியர் உட்பட) 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5%, உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% என 59.50%  இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இவை இரண்டும் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாவதாக மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 15% இடங்களும், முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 50% இடங்களும் பெறப்பட்டு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டு, அந்த இடங்கள் மத்திய அரசின் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த இடங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டுமா, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டுமா? என்பது குறித்து பல்வேறு கொள்கை நிலைப்பாடுகள் நிலவி வருகின்றன. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் மத்திய அரசின் மூலம் நிரப்பப்படுவதால் அவை மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு இடங்களை பின்பற்றி நிரப்ப வேண்டும் என்பது தான் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.

ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றி  பட்டியலினம், பழங்குடியினம், உயர்வகுப்பு ஏழைகள் ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. இதனால் நடப்பாண்டில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 2579 இடங்கள் பறிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 11 ஆயிரத்திற்கும் கூடுதலான இடங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சமூக அநீதியை எதிர்த்து சமூக நீதிக்காக பாடுபட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் என்ற முறையிலும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15 மற்றும் 7.50% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியவர் என்ற முறையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss Appeal about OBC Medical quota


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->