தமிழ்நாடு முட்டை உற்பத்தியில் நம்பர் ஒன்...! -19.98% பங்களிப்புடன் தேசிய சாதனை - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோழி வளர்ப்பு என்றால், இன்று ஒரு மாபெரும் தொழில் துறை என்றே சொல்ல வேண்டும். ஆனால் இதன் தொடக்கம் 1975-ம் ஆண்டுகளில், விவசாயிகளின் உப தொழிலாக மிக எளிமையாக ஆரம்பமானது. அக்காலத்தில் ஒரு பண்ணையில் 100 முதல் 500 கோழிகள் மட்டுமே வளர்க்கப்பட்டன.

காலப்போக்கில் தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரித்ததன் விளைவாக, முட்டைக்கோழி வளர்ப்பு இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய தொழிலாக உருவெடுத்துள்ளது.இன்றைக்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணையாளர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இந்தத் துறையை முழுமையாக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலம், முட்டை உற்பத்தியின் துடிப்பான மையமாக விளங்குகிறது. இம்மண்டலத்தில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருவதுடன், ஒவ்வொரு பண்ணையிலும் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவிலேயே மிகக் குறைந்த பரப்பில் அதிக அளவில் கோழிகள் வளர்க்கப்படும் பகுதி என்ற பெருமையை நாமக்கல் மண்டலம் பெற்றுள்ளது. “இந்தியாவின் முட்டை நகரம் (Egg City)” என அழைக்கப்படும் இப்பகுதியில், உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட கோழிப்பண்ணைகள், உள்நாட்டு தேவையுடன் சேர்ந்து சர்வதேச சந்தையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் வெளியான அடிப்படை கால்நடை பராமரிப்பு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு 19.98 சதவீதம் பங்களிப்புடன் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் 12.91 சதவீதமும், தெலுங்கானா 12.32 சதவீதமும் பங்களிப்பு வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் முட்டைக்கோழிகளின் எண்ணிக்கை சுமார் 8.79 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் தினசரி 7.47 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

இந்த அபார உற்பத்தி காரணமாக, தேசிய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் முதன்மை இடத்தை தக்க வைத்துள்ளது.மேலும், தமிழ்நாட்டில் தனிநபருக்கான முட்டை கிடைப்பும் இந்த ஆண்டில் 317 முட்டைகளாக உயர்ந்து, தேசிய சராசரியான 106 முட்டைகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வரை, இந்த ஆண்டில் மட்டும் நாமக்கல்லில் இருந்து 139 கோடியே 62 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் 78 கோடியே 64 லட்சம் என்ற எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu number one egg production national record 19point98 percentage contribution


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->