உச்சத்திலிருந்து சரிவு! ‘கிடுகிடு’ தங்கம்-வெள்ளி விலைக்கு பிரேக்...! - மக்களுக்கு இனிய நிம்மதி
decline from peak rapid rise gold and silver prices comes halt welcome relief people
கடந்த ஒரு மாதமாக தங்கம், வெள்ளி விலைகள் ‘கிடுகிடு’வென ஏறுமுகம் கொண்டு, தினந்தோறும் புதிய உச்சங்களை தொட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. குறிப்பாக தங்கம் விலை, கடந்த 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,04,800 என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியது.
அதேபோல், வெள்ளி விலையும் சாதனை வேகத்தில் பாய்ந்தது. கடந்த 27-ஆம் தேதி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.31, கிலோவுக்கு ரூ.31,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.285, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் என இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது.

இந்த தொடர் உயர்வு, “இப்படியே விலை ஏறினால் என்ன செய்வது?” என்ற புலம்பலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.இந்நிலையில், கொஞ்சமாவது விலை குறையாதா? என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு நேற்று இனிய அதிர்ச்சி கிடைத்தது.
தங்கம், வெள்ளி விலைகள் இரண்டுமே ஒரே நாளில் அதிரடியாக சரிந்து, இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்கும் பொதுமக்களுக்கு நிம்மதி அளித்தன.நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.420, சவரனுக்கு ரூ.3,360 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,600, ஒரு சவரன் ரூ.1,00,800 என்ற அளவில் விற்பனையானது.
வெள்ளி விலையும் அதேபோல் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.23, கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.258, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் என்ற அளவுக்கு சரிந்தது.
இந்த சரிவின் தொடர்ச்சியாக, இன்றும் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம், இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,00,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,550-க்கு கிடைக்கிறது.வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.258, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் என்ற நிலையே தொடர்கிறது.
தொடர் உச்சத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்த திடீர் சரிவு, “விலை ஏற்றம் முடிவுக்கு வருகிறதா?” என்ற எதிர்பார்ப்பை சந்தையில் உருவாக்கியுள்ளது.
English Summary
decline from peak rapid rise gold and silver prices comes halt welcome relief people