தேசிய பூங்காவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்..மக்களே உஷார்!
African swine fever in the national park People be cautious
கிண்டி தேசிய பூங்காவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுகிறது.இதனால் பூங்கா பகுதியில் தெருக்களில் சுற்றி திரியும் பன்றிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஜூன் மாதத்தில் கிண்டி தேசிய பூங்காவிற்குள், தெருவில் திரியும் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. இது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறையினர், இறந்த பன்றிகளின் உடல்களில் இருந்து சேகரித்த மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.அப்போது அங்கு பரிசோதனையின் முடிவில் வீட்டு மற்றும் காட்டு பன்றிகளை பாதிக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தெருவில் திரியும் 40-க்கும் மேற்பட்ட பன்றிகளை பூங்கா வளாகத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகள் தொடங்கினர்.
கிண்டி தேசிய பூங்காவிற்குள் தீவனத்துடன் கூடிய கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிகள் சிக்கியவுடன், நோய் கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி கருணை கொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல், பன்றிகளுக்கு ஆபத்தானது என்றாலும், பூங்காவிற்குள் உள்ள மற்ற வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த வைரஸ் பன்றிகளை மட்டுமே பாதிக்கிறது. காட்டுப்பன்றிகள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் பரவக்கூடும். ஆனால் மற்ற விலங்குகளுக்கு பரவக்கூடியது அல்ல என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த பன்றிக்காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றாலும், வைரஸ் பிறழ்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி உலக அளவில் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் உள்ள பன்றிகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்கவும், கிண்டி தேசிய பூங்காவில் தெருக்களில் திரியும் பன்றிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
English Summary
African swine fever in the national park People be cautious