பாலியல் சீண்டல் செய்த ஆசிரியருக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..!
action for sexually harassed teacher
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை அருகே குண்ணாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதை வயது 59. இவர் தோகைமலை அருகே உள்ள பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் மூலம், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மருதை மீது புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், போலீசார் ஆசிரியர் மருதை மீது போக்சோ உள்ளிட்ட வழக்குப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர் மருதையை விடுதலை செய்யக்கோரி பள்ளியின் வாசல் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கலெக்டர் பிரபு சங்கர், எஸ்.பி. சுந்தரவதனம், குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவ, மாணவிகளை மட்டும் தனியாக ஒரு அறைக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ஊர் முக்கியஸ்தர்களை வரவழைத்தும் விசாரித்தனர். அதன் பிறகு மாணவ, மாணவிகள் எழுதிக் கொடுத்த புகாரை அவர்களின் பெயர்களை வெளியிடாமல் படித்துக் காட்டினர். மாணவிகளிடம் ஆசிரியர் மருதை மூன்று ஆண்டுகளாக பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், அந்த பிரச்சினைகளை அப்போது பணியில் இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேசி முடித்து வைத்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த வாரம் இப்பள்ளியில் பாலியல் சீண்டல், போக்சோ சட்டம் குறித்து நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் தனித்தனியாக தகவலை எழுதி கேட்டபோது, சில மாணவ, மாணவிகள் மருதை ஆசிரியர் எப்படியெல்லாம் பாலியல் சீண்டல் செய்தார் என்று எழுதிக் கொடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, ஆசிரியர் மருதை கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே, கலெக்டர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களை கலைந்து போகச் சொல்லுங்கள். இல்லையென்றால் குற்றவாளிக்கு சாதகமாக போராட்டம் செய்வதாக கூறி அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று ஊர் முக்கியஸ்தர்களை எச்சரித்தார். அதன் பிறகு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பொம்மநாயக்கன்பட்டி பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 வரை பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
action for sexually harassed teacher