சின்ன காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலில் கிபி 11-ஆம் நூற்றாண்டு போர் வீரரின் சிற்பம் கண்டுபிடிப்பு..!
A sculpture of an 11th century AD warrior has been discovered at the Thumbavanamman Temple in Chinna Kanchipuram
சென்னை தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மு.அன்பழகன் உள்ளிட்ட பலர் சின்னகாஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலில் கள ஆய்வு நடத்தினர்.
அப்போது, கோயிலில் கிபி 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்வீரரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்சியர் சு.உமாசங்கர், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ச.விமல்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து மு.அன்பழகன் கூறியதாவது:
கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் போரிலோ அல்லது தன் சமூகத்தை காப்பாற்றும் போராட்டங்களிலோ உயிர்நீத்த வீரரின் நினைவுக்கல்லாகும் என்பர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதை வீரக்கல் என்றும் சொல்வார்கள். இந்த சிற்பம் 25.5 செமீ உயரமும், 15 செமீ அகலமும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு ஒழுங்கற்ற கல்லில் உருவாக்கப்பட்ட வீரன், போர் செய்யும் நிலையில் உள்ளார். கம்பீரமான தோற்றத்துடன் இடதுபக்கம் திரும்பி நிற்கும் இவரது இடது கால் முன்னோக்கியும், வலது காலின் முன்பாதம் தரையில் ஊன்றியும், பின்பாதம் தரையில் ஊன்றாமலும் முன்னோக்கி நகர உந்துவதுபோல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிற்பத்தில், இடது கையில் இருக்கும் கேடயம் வட்டமாக உள்ளதாகவும், எதிரில் போர் செய்யும் வீரனின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உயர்த்தி பிடித்தப்படி உள்ளது. வலது கையில் உள்ள உயர்ந்த வாள் எதிரில் உள்ள பகை வீரனை வீழ்த்து வதற்காக உயர்த்தி பிடித்தப்படி உள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் சிற்பத்தின் தலையில் கிரீடமும், காதுகளில் மிகப்பெரிய காதணிகளும் மார்பில் அணிகலனும் தோள்களில் தோள் வளைகளும் அணிந்துள்ளார். இடையில் பட்டாடை அணிந்துள்ளார். பட்டாடையின் முடிச்சுத் தொங்கல்கள் இரு கால்களுக்கும் இடையில் சிறிய அளவிலும், இடது காலின் முட்டிக்கு கீழ்ப்பகுதி வரையிலும் நீண்டு தொங்குகிறது.
இடையின் வலது பகுதியில் சிறிய அளவிலான குறுவால் காணப்படுகிறது. எழுத்துக்கள் இல்லாத இந்த சிற்பத்தின் காலம் கிபி 11ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று மு.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
English Summary
A sculpture of an 11th century AD warrior has been discovered at the Thumbavanamman Temple in Chinna Kanchipuram