ஒன்றிய அரசின் நிர்வாகத் தோல்வியால் மாணவர்களின் மருத்துவக் கனவுகள் சிதைக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது; ஜவாஹிருல்லா..!
Jawahirullah states that the shattering of students medical dreams due to the administrative failure of the Union government cannot be permitted
''நீட் தேர்வை அறிமுகப்படுத்தியபோது, மருத்துவக் கல்வியில் தகுதியையும் தரத்தையும் உறுதிப்படுத்துவதே நோக்கம் என்று ஒன்றிய அரசு கூறியது. ஆனால், தேர்வு வினாத்தாள் கசிவு, நிர்வாகக் குளறுபடிகள், தகுதி மதிப்பெண்கள் தொடர்பான குழப்பங்கள் ஆகியவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படும்போது, தனது பொறுப்பிலிருந்து ஒன்றிய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது'' என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் & நாகை சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது;
''2026–27 கல்வியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் 836 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருப்பதும், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மருத்துவக் கல்வி இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் ஒன்றிய அரசின் மருத்துவக் கல்விக் கொள்கையின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாகத் தேர்வு மீண்டும் நடத்தப்பட்ட சூழலில், தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் தொடர்பான குளறுபடிகளும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 3,426 எம்.பி.பி.எஸ். இடங்கள் உட்பட 4,068 மருத்துவம் சார்ந்த கல்வி இடங்கள் காலியாக உள்ளது என தெரிய வருகின்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டும் 836 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பாமல் இருப்பது மற்றொரு கவலைக்குரிய அம்சமாகும். ஆண்டுக்கு ரூ.23 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் சூழலில், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் திறமையான மாணவர்களால் இந்த இடங்களை அணுக முடியவில்லை. மருத்துவக் கல்வியைச் சந்தையில் விற்கப்படும் பொருளாக மாற்றிவிட்டு, இடங்கள் நிரம்பவில்லை என்று கூறுவது சமூகநீதிக்கு எதிரானது.
நீட் தேர்வை அறிமுகப்படுத்தியபோது, மருத்துவக் கல்வியில் தகுதியையும் தரத்தையும் உறுதிப்படுத்துவதே நோக்கம் என்று ஒன்றிய அரசு கூறியது. ஆனால், தேர்வு வினாத்தாள் கசிவு, நிர்வாகக் குளறுபடிகள், தகுதி மதிப்பெண்கள் தொடர்பான குழப்பங்கள் ஆகியவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படும்போது, தனது பொறுப்பிலிருந்து ஒன்றிய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது.
மருத்துவக் கல்வி இடங்கள் காலியாக இருப்பது மருத்துவர்களாக உருவாக வேண்டிய மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் மருத்துவ மனிதவளத்தையும் பாதிக்கும் பிரச்சினையாகும். ஒருபுறம் மருத்துவர்களின் பற்றாக்குறை குறித்து பேசிக்கொண்டே, மறுபுறம் இருக்கும் மருத்துவக் கல்வி இடங்களைக்கூட நிரப்ப முடியாத நிலையை உருவாக்குவது முரண்பாடானது.
எனவே, காலியாக உள்ள மருத்துவக் கல்வி இடங்களை நிரப்புவதற்காக, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனைத்து சமூகப் பிரிவினருக்கும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைத் தற்காலிகமாகத் தளர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிறப்புக் கலந்தாய்வு நடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய வேண்டும்.
அதேவேளையில், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணங்கள் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மாணவர்களுக்குத் தடையாக மாறுவதைத் தடுக்க உரிய கட்டணக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் அவசியம் எடுக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் நிர்வாகத் தோல்வியால் மாணவர்களின் மருத்துவக் கனவுகள் சிதைக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.'' என ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Jawahirullah states that the shattering of students medical dreams due to the administrative failure of the Union government cannot be permitted