உள்ளாட்சித் துறை இயக்குனரை கண்டித்து மிகப்பெரிய போராட்டம்..அதிமுக உரிமை மீட்பு குழு எச்சரிக்கை!
A massive protest against the Director of the Local Administration Department AIADMK Rights Recovery Team warning
உள்ளாட்சித் துறை இயக்குனரை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக உரிமை மீட்பு குழு ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:புதுவை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டு வந்த ஸ்வச் பாரத் நிறுவன டெண்டர் காலம் முடிவடைந்து இப்போது கிரீன் வாரியர் என்ற நிறுவனம் குப்பை அள்ளும் பணியை தற்போது புதுவை மாநிலம் முழுவதும் துவங்கி உள்ளது.
மாநில மக்களின் மிக முக்கியமான சுகாதாரம் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எந்த அளவு பொறுப்பில்லாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர் என்பது இந்த புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதிலிருந்து மிகத் தெளிவாக தெரிகிறது.
ஜூலை முதல் தேதியில் இருந்து புதிய நிறுவனம் குப்பைகளை அள்ளும் பணியை மேற்கொள்ளப் போகிறது என்பது தெரிந்தும் எந்தவிதமான முன்னேற்பாடுகளையும் செய்யாமல் அலட்சிய போக்குடன் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இதனால் போதிய அளவில் குப்பை தொட்டிகள் தெருக்களில் வைக்கப்படாமல் குப்பைகள் வீதியில் கொட்டப்படும் அவலம் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.
லாரிகள் வந்து செல்லும் பெரிய தெருக்களில் மட்டும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சிறிய தெருக்களில் தினந்தோறும் பொதுமக்கள் குப்பைகளை போடும் இடங்களில் தொட்டிகள் இதுவரை வைக்கப்படவில்லை.
குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாததற்கு காரணம் குப்பை தொட்டிகள் குறைவாக இருப்பதாகவும் மிக விரைவில் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் பதில் சொல்கின்றனர்.
புதிய நிறுவனம் பொறுப்பேற்கும் போது எத்தனை இடங்களில் தொட்டிகள் வைக்க வேண்டும் எப்படி குப்பைகளை சரிவர வார வேண்டும் என்று முன்னேற்பாடுகளை முறையாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் மக்களின் நலனில் முற்றிலும் ஆர்வமில்லாமல் அலட்சியப் போக்கோடு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செயல்பட்டு உள்ளனர்.
குப்பை தொட்டிகளை காணவில்லை என்று பொதுமக்கள் மீம்ஸ் போடும் அளவிற்கு உள்ளாட்சித் துறையின் செயல்பாடு தற்போது இருந்துள்ளது.
எனவே அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் அனைத்து உள் திருக்களிலும் குப்பை தொட்டிகளை உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரோட்டில் குப்பைகளை வீசுவதால் நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே பல்வேறு துறைகளில் முறைகேடு புகார்களுக்கு உள்ளான அதிகாரி தற்போது உள்ளாட்சித் துறையின் இயக்குனராக உள்ளார். உள்ளாட்சித் துறையில் தற்போது நடக்கும் இதுபோன்ற மக்கள் நலனுக்கு எதிரான சம்பவங்களை பார்க்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரி இந்த துறையிலும் முறை கேட்டுக்கு அட்சாரம் போட்டு உள்ளாரா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே போர் கால அடிப்படையில் குப்பை தொட்டிகள் உடனடியாக வைக்கப்படாவிட்டால் உள்ளாட்சித் துறை இயக்குனரை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக உரிமை மீட்பு குழு ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
English Summary
A massive protest against the Director of the Local Administration Department AIADMK Rights Recovery Team warning