ரூ.80 லட்சம் மோசடி... தொழில் அதிபரை கடத்திய கும்பல்...! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் திருப்பம்...! - Seithipunal
Seithipunal


கோவையில் தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்று பணம், நகை பறித்த சம்பவம் தொடர்பான விசாரணையில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி ரூ.80 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்த தேப்ஜித் ரானா (25), திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

தனது கடையில் பணம் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இரட்டிப்பு தொகையாக திருப்பி வழங்கப்படும் என்று அவர் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய கோவையைச் சேர்ந்த ஆனந்தகுமார், அவரது நண்பர் செந்தில்குமார் உள்ளிட்ட 10 பேர், தேப்ஜித் ரானாவிடம் மொத்தம் ரூ.80 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட தேப்ஜித் ரானா வாக்குறுதி அளித்தபடி லாபத்தொகையை வழங்கவில்லை என்றும், முதலீடு செய்த அசல் தொகையையும் திருப்பித் தரவில்லை என்றும் தெரிகிறது.

இந்த சூழலில், தேப்ஜித் ரானா தனது நண்பர்களான சித்தார்த் சர்மா, ஆதர்ஷ் குமார் ஆகியோருடன் கோவைக்கு வந்துள்ளார். பின்னர் கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த ஆனந்தகுமார், செந்தில்குமார் உள்ளிட்ட 10 பேர் அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு தேப்ஜித் ரானா உள்பட 3 பேரையும் காரில் அழைத்துச் சென்ற அவர்கள், ரூ.26 லட்சம் பணம் மற்றும் 1 பவுன் நகையை பறித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தேப்ஜித் ரானா அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், தேப்ஜித் ரானா இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி 10 பேரிடம் இருந்து ரூ.80 லட்சம் பெற்றதும், பின்னர் லாபத்தொகையையும் முதலீட்டுத் தொகையையும் திருப்பி வழங்காமல் மோசடி செய்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பணத்தை இழந்தவர்கள் ஆத்திரமடைந்து, தேப்ஜித் ரானாவை கடத்திச் சென்று பணம் மற்றும் நகையை பறித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கடத்தல் மற்றும் பணம் பறித்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோத் (37), வினோத்குமார் (39), திருச்சியைச் சேர்ந்த சண்முகராஜ் (44), மயிலாடுதுறையைச் சேர்ந்த செந்தில்குமார் (45) ஆகிய 4 பேரை பீளமேடு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதற்கிடையே, செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னையும் சேர்த்து 10 பேரிடம் தேப்ஜித் ரானா மற்றும் சித்தார்த் சர்மா ஆகியோர் ரூ.80 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தேப்ஜித் ரானா மற்றும் சித்தார்த் சர்மா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கடத்தப்பட்டதாக புகார் அளித்த தொழில் அதிபரே, மறுபுறம் ரூ.80 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு வழக்குகளிலும் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

80 lakh fraud Gang that kidnapped industrialist Shocking twist revealed investigation


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->