ரூ.1 லட்சம் மதிப்புள்ள 3,000 போதை மாத்திரைகள் பறிமுதல்...! - ஈரோடு எஸ்பி-யின் 'ஸ்பெஷல் டீம்' அதிரடி வேட்டை...!
3000 narcotic pills worth 1 lakh seized Erode SP Special Team conducts sting operation
ஈரோட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு பிரிவு, ரெயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அணியினர் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே ரகசியமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வீரப்பன் சத்திரம் காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கலைச்செல்வன் (22) என்பது தெரியவந்தது. மேலும், விற்பனை நோக்கில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலைச்செல்வனை கைது செய்த காவலர்கள், அவரிடமிருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மகாராஷ்டிராவில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி ஈரோட்டில் விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
3000 narcotic pills worth 1 lakh seized Erode SP Special Team conducts sting operation