வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி...! - திமுக முன்னாள் அமைச்சர் பெயரைக் கெடுத்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை...!
27 lakh scam pretext getting job Action taken case defaming name former DMK minister
தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரை தவறாக பயன்படுத்தி, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக நம்பவைத்து ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சீனிவாசன் (60), சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதில், தனது மகன் பொறியியல் பட்டம் முடித்துவிட்டு வேலை தேடி வந்ததாகவும், அப்போது அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் (64) என்பவர் அறிமுகமானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இளஞ்செழியன், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் பணியை எளிதில் பெற்றுத்தர முடியும் என உறுதியளித்துள்ளார்.

மேலும், சிவசங்கருடன் எடுத்த புகைப்படங்களையும் காட்டி நம்பிக்கை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை உண்மையென நம்பிய சீனிவாசன், தனது மகனுக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்ட நிலையில், இளஞ்செழியன் பல கட்டங்களாக ரூ.27 லட்சம் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், வாக்குறுதியளித்தபடி வேலை கிடைக்காததுடன், பெற்ற பணத்தையும் திருப்பி வழங்காமல் இளஞ்செழியன் ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், பணம் திரும்ப கிடைக்காததால் சந்தேகம் வலுத்த நிலையில், முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரை முன்வைத்து திட்டமிட்ட மோசடி நடந்திருக்கலாம் என சீனிவாசன் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.விசாரணையில், இளஞ்செழியன் தன்னை தி.மு.க. நிர்வாகியாக அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுவதாகவும் பலரிடம் கூறி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்ய காவலர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். நேற்று ஈரோட்டில் பதுங்கியிருந்த இளஞ்செழியனை காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர்.விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுவதாக காட்டும் அடையாள அட்டையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.அந்த அடையாள அட்டை உண்மையானதா? அவர் உண்மையிலேயே பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுகிறாரா? அல்லது இதுவும் மோசடிக்காக உருவாக்கப்பட்ட போலி ஆவணமா? என்ற கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
27 lakh scam pretext getting job Action taken case defaming name former DMK minister