கரூரில் தொடரும் பதற்றம்.. துப்பாக்கியுடன் விரைந்த சி.ஆர்.பி.எஃப் படை.. 2வது நாளை எட்டிய ஐடி ரெய்டு..!!
200 CRPF soldiers visit Karur for income raid
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை தொடங்கிய வருமானவரித்துறை சோதனையானது 2வது நாளை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள், மின்சாரத்துறை ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, கரூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் நேற்று வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்ட போது அவர்களை தடுத்த கரூர் மேயர் கவிதா தலைமையிலான திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 50க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது கரூர் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று திமுக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் பெண் வருமானவரித்துறை அதிகாரி மீது கரூர் மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற இருந்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் முற்றுகையிட்டு வருமான வரித்துறை அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்ததால் சோதனையானது கைவிடப்பட்டது. மேலும் 25க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அதன் பிறகு காவல்துறையினர் பாதுகாப்புடன் நேற்று மாலை கரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்கிடையே கரூர் மாநகராட்சி துணை மேயர் தரணி சரவணன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற போது பூட்டி இருந்ததால் அந்த வீட்டிற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். இதனை கண்ட திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் அசாதாரண சூழல் நினைவு வருவதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் என அழைக்கப்படும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 100 ஆண் சிஆர்பிஎஃப் வீரர்களும், 100 பெண் சிஆர்பிஎஃப் வீராங்கனைகளும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் இரண்டாவது நாள் சோதனை மேற்கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் கரூர் மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
English Summary
200 CRPF soldiers visit Karur for income raid