திண்டிவனம் அருகே 'சன்னியாசி சாமி'என்று ஊர் மக்கள் வணங்கி வந்த ஐயனார் சிலை: 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பம்..!
1300 year old Pallava sculpture of Aiyanar discovered near Tindivanam
திண்டிவனம் அருகே 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அன்னம்புத்தூரில் ஏரிக்குள் சன்னியாசிமேடு பகுதியில் பழமை வாய்ந்த ஐயனார் சிற்பம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்தனர். குறித்த சிற்பம் குறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
அன்னம்புத்தூர் ஏரிக்குள் சன்னியாசிமேடு எனும் பகுதியில் கருங்கல்லில் மீது தனிச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் சன்னியாசி சாமி என்று வணங்கி வருகின்றனர். இந்த சிற்பத்துக்கு உரியவர் ஐயனார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சிற்பம் பிரம்மாண்டமான தலை அலங்காரத்துடனும், இடைக்கச்சை அணிந்தும் காணப்படுவதோடு, ஐயனாரின் இடுப்பில் குறுவாள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், காதுகள், மார்பு, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையை முழங்கால் மீது வைத்தும் இடது கையை தொடை மீது வைத்தும் வலது காலை குத்திட்டும் இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் இவர் அமர்ந்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்.மேலும், வழக்கமான ஐயனார் சிற்பங்களில் காணப்படும் பூரணி பொற்கலை மற்றும் அவரது வாகனம் உள்ளிட்ட எதுவும் இந்த சிற்பத்தில் காணப்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சிற்பம் முற்பட்ட சிற்பமாக இது இருக்கலாம் என்றும் இதன் காலம் கி.பி.07-ஆம் நூற்றாண்டு. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் என்று தெரிவித்துள்ளார். அன்னம்புத்தூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக பல்லவர் கால ஆவுடையார் ஒன்று இங்கு காணப்படுகிறது.

மேலும் சிவாலய வளாகத்தில் உள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் பிரம்மதேயமாக இருந்ததையும் அன்னப்புத்தூர் எனும் பெயர் அப்போதே வழங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம் எட்ன்றும் கூறியுள்ளார்.
மேலும், பல்லவர் காலத்திலும் அதனை தொடர்ந்து சோழர் காலத்திலும் அன்னம்புத்தூர் கிராமம் சிறந்து விளங்கியது என்பதை இங்கிருக்கும் வரலாற்று தடயங்கள் நமக்கு உணர்த்துகின்றன என்று வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
1300 year old Pallava sculpture of Aiyanar discovered near Tindivanam