WWE போட்டியில் 'தி பீஸ்ட்' என்று அழைக்கப்படும் ப்ராக் லெஸ்னர் தனது ஓய்வை அறிவித்தார்..!
WWE Legend Brock Lesnar Announces His Retirement
WWE அமைப்பின் மிக முக்கிய நிகழ்வான ரெஸில்மேனியா 42-இல், மல்யுத்த ஜாம்பவான் ப்ராக் லெஸ்னரை, நைஜீரிய வீரர் ஒபா பெமி வீழ்த்தினார். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, 'தி பீஸ்ட்' என்று அழைக்கப்படும் ப்ராக் லெஸ்னர் தனது ஓய்வை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளார்.
லாஸ் வேகாஸில் உள்ள அலிஜியண்ட் மைதானத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டி தொடங்கியது. மல்யுத்தத்தில் 24 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த ப்ராக் லெஸ்னருக்கு எதிராக, இளம் வீரரான ஒபா பெமி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். போட்டியில் லெஸ்னரின் பலமான தாக்குதல்களை பெமி முறியடித்து, தனது அபார உடல் வலிமையால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியின் இறுதிக்கட்டத்தில், லெஸ்னரின் முகத்தில் பெமி, முழங்கால் தாக்குதலைத் தொடுத்து, அவரை நிலைகுலையச் செய்து, லெஸ்னரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த போட்டி முடிந்ததும், தனது கையுறைகளை மல்யுத்த வளையத்திற்குள் கழற்றி வைத்துவிட்டு, ரசிகர்களை நோக்கிச் சல்யூட் அடித்து லெஸ்னர் விடைபெற்றார். இது மல்யுத்த வீரர்களின் பாரம்பரிய ஓய்வு அறிவிப்பாகக் கருதப்படுகிறது. சுமார் கடந்த 24 ஆண்டுகளாக மல்யுத்த உலகில் முத்திரை பதித்து வந்த லெஸ்னரின் இந்தப் பயணம் முடிவுக்கு வந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'தி பீஸ்ட்' என்று அழைக்கப்படும் ப்ராக் லெஸ்னரை வீழ்த்தி வெற்றிப்பெற்றதன் மூலம், டபிள்யூடபிள்யூஇ-யின் அடுத்த தலைமுறை நட்சத்திரமாக ஒபா பெமி உருவெடுத்துள்ளார்.
English Summary
WWE Legend Brock Lesnar Announces His Retirement