வைபவ் சூரியவன்சி உலக சாதனை; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி!
Vaibhav Suryavanshi sets world record India defeats South Africa to win
ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக இந்திய அண்டர்-19 அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் இந்திய அண்டர்-19 அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக விளையாடாததால், சமீப காலமாக அபாரமாக செயல்பட்டு வரும் 14 வயதே ஆன வைபவ் சூரியவன்சி தற்காலிகமாக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அண்டர்-19 ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் அணியை தலைமை தாங்கிய கேப்டன் என்ற உலக சாதனையை வைபவ் சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன்பு, 2004ஆம் ஆண்டு 16 வயதில் பாகிஸ்தானின் அண்டர்-19 அணியை அஹ்மத் சேஷாத் தலைமை தாங்கியதே முந்தைய சாதனையாக இருந்தது.
இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 3ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவின் வில்லோமோர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அண்டர்-19 அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அண்டர்-19 அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆரோன் ஜார்ஜ் (5), கேப்டன் வைபவ் சூரியவன்சி (11), வேதாந்த் திரிவேதி (11), அபிஞான் குண்டு (21) ஆகியோர் விரைவில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 67/4 என சரிந்தது. இதன் பின்னர் மிடில் ஆர்டரில் பொறுப்புடன் விளையாடிய ஹர்வன்ஸ் பங்காலியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 93 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக ஆர்.எஸ். பங்காலியா 65, கனிஷ்க் சௌஹான் 32, கிளன் பட்டேல் 26 ரன்கள் சேர்த்தனர். தென்னாப்பிரிக்க அணிக்காக ஜேஜே பாசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
300 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அண்டர்-19 அணியில் ஜோரீச் வேன் நிதானமாக விளையாடி அணியை முன்னேற்றினார். ஆனால், அட்னன் லகாட் (19) மற்றும் கேப்டன் முகமத் புல்புல்லா (16) ஆகியோர் விரைவில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய அர்மன் மனக், 46 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
மறுபுறம் தொடர்ந்து போராடிய ஜோரீச், 60 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தபோது, திடீரென இடியுடன் கனமழை பெய்தது. நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால், போட்டியை தொடர முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் நடுவர்கள் டிஎல்எஸ் (DLS) விதிமுறையை பயன்படுத்தினர். அப்போது 148/4 ரன்கள் எடுத்திருந்த தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியை விட 25 ரன்கள் குறைவாக இருந்ததால், 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அண்டர்-19 அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணிக்காக பந்துவீச்சில் தீபக் திவேந்திரன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி முக்கிய பங்காற்றினார். இளம் கேப்டன் வைபவ் சூரியவன்சியின் தலைமையில் கிடைத்த இந்த வெற்றி, 2026 அண்டர்-19 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.
English Summary
Vaibhav Suryavanshi sets world record India defeats South Africa to win