#IPL2023 : மழை நிற்குமா? இறுதிப்போட்டி நடக்குமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்.!
Tamilnadu weather man update to Ahamedabad stadium Rain
ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் தற்போது மழை பெய்து வருகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அனைத்து போட்டிகளும் முடிவடைய உள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.
அதனைத் தொடர்ந்து 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் ஐபிஎல் தொடரின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஐபிஎல் ரசிகர்களுடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மழை குறுக்கீடு
இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் தற்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இது ஐபிஎல் ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் காரணமாக தற்போது வரை டாஸ் போடாமல் போட்டி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் "மழை மேகங்கள் அகமதாபாத் மைதானத்தை விட்டு நகர்கின்றன. லேசான மழை மற்றும் தூறல்கள் இருக்கும். பின்னர் தூறல்களும் நிற்கும். மைதானத்தில் இருக்கும் வடிகால் பற்றி எனக்குத் தெரியவில்லை. நன்றாக இருந்தால், ஓவர்கள் இழக்காமல் இரவு 9.00 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒருவேளை மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் லீக் போட்டியில் அதிக புள்ளி எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மழையால் போட்டி இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டால் நாளை நடைபெறும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் ஐபிஎல் கமிட்டி வெளியிடவில்லை.
English Summary
Tamilnadu weather man update to Ahamedabad stadium Rain