டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கம்: ஹார்டிக் பாண்டியா அனுப்பிய ஒரு மெசேஜ் என்னை தேற்றியது – ஜிதேஷ் சர்மா உருக்கம்
Removal from T20 World Cup squad A message from Hardik Pandya comforted me Jitesh Sharma Urukkam
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி அண்மையில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு பிறகு, இந்திய வீரர்கள் தற்போது 2026 ஐபிஎல் தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல நட்சத்திர வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா, டி20 உலகக்கோப்பைக்கு முன்பு அணியில் இருந்து நீக்கப்பட்ட அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை அணியை தேர்வு செய்யும் இறுதி கட்டத்தில், டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் தேவை என்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு அவருக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜிதேஷ் சர்மா கூறுகையில்,“டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து கடைசி நேரத்தில் நான் நீக்கப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அணியின் சமநிலைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நினைத்து அதை நான் ஏற்றுக்கொண்டேன்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:“என்னை அணியில் இருந்து நீக்கிய பிறகு பல வீரர்கள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினர். ஆனால் முதலில் மெசேஜ் அனுப்பியது ஹார்டிக் பாண்டியா தான். அவர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர். பரோடா அணிக்காக அவருடன் சேர்ந்து விளையாடியதால் அவருடைய குணம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்,” என்றார்.
அதன்பின் ஹார்டிக் பாண்டியா அனுப்பிய செய்தியை நினைவுகூர்ந்த ஜிதேஷ்,“நீ ஒரு மனிதனாகவும், கிரிக்கெட் வீரனாகவும் தொடர்ந்து வளர வேண்டும். அதனால் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இரு” என்று பாண்டியா என்னை தேற்றி உற்சாகப்படுத்தினார் என்று தெரிவித்தார்.
இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளதுடன், ஒரு சக வீரராக ஹார்டிக் பாண்டியா காட்டிய ஆதரவு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
English Summary
Removal from T20 World Cup squad A message from Hardik Pandya comforted me Jitesh Sharma Urukkam