இந்திய அணி அபார வெற்றி! கோலி, ஸ்ரேயாஸ் அசத்தல் ஆட்டம்!  - Seithipunal
Seithipunal


மேற்கிந்திய தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கயானாவில் நடைபெற்ற முதல் போட்டியில் மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரண்டாவது போட்டியானது டிரினிடாட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். 

கடந்த போட்டியில் விளையாடிய அணியே இந்த போட்டியில் விளையாடும் எனவும் அணியில் எவ்வித மாற்றத்தையும் செய்யாமல் களமிறங்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரையில் அந்த அணியில் காயம் காரணமாக பேபியன் ஆலன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் அணியில் இணைக்கப்பட்டார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணிக்கு காயத்திலிருந்து மீண்டு வந்த ஷிகர் தவான், ரோகித் சர்மாவும் களமிறங்கினார்கள். இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பி வரும் தவான் நேற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். மறுபுறம் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா வேடிக்கை மட்டுமே பார்த்து நிற்க, அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமலேயே விராட் கோலி மட்டுமே ஆடும்படியான சூழல் உருவானது. 

தொடர்ந்து விராட் கோலி அதிக பந்துகளை பிடிக்க, ரோகித் சர்மா ஒரு பக்கம் கோலிக்காக ரன்களை எடுக்க மட்டும் ஓடிக்கொண்டிருந்தார். அதே போல அவ்வப்போது தொடர்ச்சியாக ஸ்ட்ரைக் கிடைக்காததால் அவர் அடித்து ஆட முடியவில்லை. இந்நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த ரோகித் சர்மா ஒரு கட்டத்தில் இறங்கி அடிக்க அது கேட்ச்சாக மாறி போக 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அதற்கடுத்தபடியாக வந்த ரிஷப் பண்ட் ஆரம்பத்தில் இரண்டு மூன்று போட்டிகளில் அடித்தாலும், அதன்பிறகு சுழற்பந்து வீச்சாளர் சோஸ் பந்துவீச்சை சந்திக்கும் போது, தொடர்ச்சியாக பத்து பந்துகளில் டாட் வாங்கி நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டார். 

அதற்கடுத்த ஓவர்லயே பிராத்வெய்ட் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 20 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார். அதற்கு அடுத்தபடியாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் வந்ததிலிருந்தே அதிரடியாக ஆட ஆரம்பித்தார். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், வீரர்களுக்கு பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மட்டும் அரைசதத்தினை கடந்து, சதத்தினை நெருங்கிக் கொண்டிருந்தார். ஸ்ரேயாஸ் அய்யரும் சில பவுண்டரிகளை விளாசி அரைசதத்தினை நெருங்கினார்.

தொடர்ந்து ஆடிய விராட் கோலி சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவருடைய 42வது சதம் ஆகும். சதமடித்த விராட் கோலி தொடர்ந்து அடித்து விளையாட 120 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி நேரத்தில் அடித்து ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகள் வேகமாக விழுந்தன. ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 280 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, கிறிஸ் கெயில் ஏவின் லூயிஸ் இந்த முறை ஓரளவு சுமாரான தொடக்கத்தை கொடுத்தது. ஒரு பக்கம் லூயிஸ் அடிக்க மறுமுனையில் கிறிஸ் கெயில் நிதானமாக விளையாடினா. 24 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஸ்வரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 11 ரன்கள் எடுத்து இருக்கும்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை, வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாம்பியன் வீரர் பிரையன் லாராவிடமிருந்து தட்டிப் பறித்தார். 

அதன் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குல்திப் யாதவ், புவனேஷ்வர் ஆகியோர் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி லேசாக தடுமாறியது. இருந்தாலும் ஒவ்வொரு வீரர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு கணிசமான பங்களிப்பை அளித்ததால், ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் இடைப்பட்ட நேரத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகள் வேகமாக இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி உறுதியானது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஏவின் லூயிஸ் 65 ரன்களும் நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் அடித்தனர். இறுதியில் 42 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இந்த ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 280 என்பது குறைக்கப்பட்டு, 46 ஓவரில் 270 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 210 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் 4 விக்கெட்டுகளையும், குல்தீப், ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், கலீல், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

இதன்மூலம் இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு ஜீரோ என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the match by 59 runs against west indies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal