பிளே-ஆஃப் முதல் போட்டி; நாளை மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது..?
If rain interrupts the first playoff match and the game is abandoned which team will advance to the final
19-வது ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. அதன்படி, நாளை (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள முதலாவது குவாலிஃபையர் (Qualifier 1) போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளது.
இதனையடுத்து, புதன்கிழமை நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் (Eliminator) போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்த முக்கியமான பிளே-ஆஃப் போட்டிகளுக்கு மழை அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி மழையினால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்ற விதிமுறைகளை பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ளது.

பிசிசிஐ விதிமுறைகளின்படி, இறுதிப்போட்டியைத் தவிர மற்ற பிளே-ஆஃப் போட்டிகளுக்கு (குவாலிஃபையர் 1, எலிமினேட்டர், குவாலிஃபையர் 2) எனத் தனியாக மாற்று நாள் (Reserve Day) எதுவும் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்படவில்லை.
இருப்பினும், லீக் போட்டிகளுடன் ஒப்பிடும்போது பிளே-ஆஃப் சுற்றுகளுக்கு மழை விதிகளில் பிசிசிஐ சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
அதாவது, லீக் போட்டிகளின் போது மழையால் ஆட்டம் தடைபட்டால், போட்டியை நடத்தி முடிக்க 60 நிமிடங்கள் (01 மணி நேரம்) மட்டுமே கூடுதல் நேரம் வழங்கப்படும். ஆனால், பிளே-ஆஃப் போட்டிகளுக்கு இந்த கூடுதல் நேரம் 120 நிமிடங்களாக அதாவது 02 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அப்போது இரு அணிகளும் தலா 05 ஓவர்கள் விளையாடினாலே அது முழுமையான போட்டியாகக் கருதப்படும். இந்த 05 ஓவர் போட்டியை நடத்துவதற்காக, இரவு 11:50 மணி வரை ஆட்டத்தைத் தொடங்கக் கால அவகாசம் உள்ளது.
ஒருவேளை கூடுதல் 02 மணி நேரம் வழங்கப்பட்டும், 05 ஓவர் இந்த ஆட்டத்தைக் கூட நடத்த முடியாத அளவுக்குப் பெருமழை பெய்து போட்டி முற்றிலும் கைவிடப்பட்டால், லீக் சுற்றுகளின் புள்ளிப்பட்டியலில் (Points Table) அதிக புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
அப்படி பார்த்தால், ஆர்சிபி மற்றும் குஜராத் இடையேயான போட்டி மழையினால் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், வரும் மே 31 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கு மட்டும் மாற்று நாள் (Reserve Day) வசதியை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
English Summary
If rain interrupts the first playoff match and the game is abandoned which team will advance to the final