எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் இதுதான்; மரகதம் குமரவேல் விளக்கம்..!
Maragatham Kumravel explains the reason behind her resignation as MLA
மதுராந்தகம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் அதிமுகவில் இருந்து விலகிய தவெக-வில் இணைந்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 03 பேரும் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து, ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மூவரும் பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்று தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதன் பின்னர் மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மரகதம் குமரவேல் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என விளக்கமளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் நாங்கள் மூவரும் முழுமனதோடு கழகத்தில் இணைந்துள்ளோம். தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-இல் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய மூன்று தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்நிலையில், இன்றைய தினம் பேரவைத் தலைவரை சந்தித்து எங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தோம் என்று குறிப்பிட்டார்.
மேலேயும், இத்தகைய சூழலில் நாங்கள் ஏன் எங்கள் பதவியில் இருந்து விலகி உள்ளோம் என மக்களிடம் தெளிவுப்படுத்த விரும்புகிறோம் என்று கூறிய அவர், தேர்தல் முடிவு கடந்த 04-ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அதாவது, தலைமை குழு நிர்வாகிகள் கலந்தாலோசித்து இரு வேறு நிலைப்பாட்டை எடுத்தனர்.
அதில் ஒன்று திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது. மற்றொன்று தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது. ஆனால், எங்களுக்கு திமுக உடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் விருப்பம் இல்லை. எங்களை போலவே பல்வேறு சட்டப்பேரவை உறுப்பினர்களின் மனநிலை இப்போது உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் எங்களது முடிவை முன்கூட்டியே எடுத்து விட்டோம் என்று விளக்கமளித்துள்ளார்.
இதன் காரணமாகத்தான் சி.வி.சண்முகம் தலைமையில் 30 அதிமுக எம்எல்ஏ-க்கள், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தோம் என்றும், அப்போது அதிமுகவில் இருந்து விலகும் முடிவில் நாங்கள் இல்லை எனவும், தவெக ஆதரவு நிலைப்பாட்டை மட்டுமே எடுத்தோம். ஆனால், அன்றைய தினத்தில் இருந்து எங்கள் மீது பல்வேறு அவதூறுகள், விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக, திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க எங்கள் மனம் விரும்பவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று மரகதம் குமரவேல் கூறியுள்ளார்.
அத்துடன், கடந்த 2021 தேர்தலில் நாங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக செயல்பட்டுள்ளோம். இருந்தும் எங்களால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றும், அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. இந்த முறையும் எங்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக செயல்பட முடியாது. ஏனெனில், 2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை சந்தித்தோம். ‘எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’ என அப்போது மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இந்த முறையும் வெற்றி பெற வைப்பதாக மக்கள் தெரிவித்தார்கள்.
இந்த சூழலில் எங்கள் தொகுதி மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். இது சுய நலன் சார்ந்தது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும், அவர் நல்லாட்சி கொடுப்பார் என நம்புவதாகவும், அதன் காரணமாகவே இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தவெக தலைமை முடிவு செய்யும். அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று மரகதம் குமரவேல் விளக்கமளித்துள்ளார்.
English Summary
Maragatham Kumravel explains the reason behind her resignation as MLA