பவுலரை அல்ல, பந்தை தான் பார்த்தேன்! பும்ராவுக்கு எதிரா முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க இதுவே காரணம்- வைபவ் சூர்யவன்ஷி
I saw the ball not the bowler This is the reason why Bumrah hit a six on the first ball Vaibhav Suryavanshi
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 15 வயதிலேயே பெரிய சாதனைகளை படைத்து வரும் இவர், உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களையும் அச்சமின்றி எதிர்கொண்டு வருவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 வயதில் அறிமுகமான வைபவ், தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த ஆண்டு தொடரிலும் சிறப்பாக விளையாடி வரும் அவர், சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 39 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவை எதிர்கொண்ட அவர், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.
பும்ராவை எதிர்கொண்ட அனுபவம் குறித்து வைபவ் கூறுகையில், “ஒரு பெரிய பவுலரை எதிர்த்து விளையாடுகிறேன் என்ற எண்ணம் எனக்கு இல்லை. அவர் வீசும் பந்தில் தான் கவனம் செலுத்தினேன். ஆரம்பத்தில் சிறிய பதட்டம் இருந்தாலும், என் ஆட்டத்தை நம்பி அதை கடந்து சென்றேன்” என்றார்.
மேலும், “பும்ராவை எதிர்கொள்ள முன்கூட்டியே பயிற்சி எடுத்தேன். குறுகிய தூரத்தில் இருந்து வேகமாக பந்தை வீச சொல்லி பயிற்சி செய்தது போட்டியில் உதவியது” என்றும் தெரிவித்தார்.
இளம் வயதிலேயே தன்னம்பிக்கையுடன் விளையாடி வரும் வைபவ் சூர்யவன்சியின் இந்த ஆட்டம், எதிர்கால இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
English Summary
I saw the ball not the bowler This is the reason why Bumrah hit a six on the first ball Vaibhav Suryavanshi