இந்தியாவின் பாரம்பரிய 'கிட்டி புல்' இன்று உலக அரங்கில்: 2,500 ஆண்டுகால பாரம்பரிய விளையாட்டின் சர்வதேச எழுச்சி!
From Village Streets to the Global Arena The International Rise of 2500 Year Old Gilli Danda
சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது நம் ஊர் பாரம்பரிய 'கிட்டி புல்' விளையாட்டு. இதிகாசமான மகாபாரதத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் தங்களது சிறுவயதில் 'கிள்ளி தண்டா' விளையாடியதாகக் குறிப்புகள் உள்ளன. இதேபோல், பண்டைய பௌத்த மத நூல்களிலும், கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்து (கி.மு.) இலக்கியங்களிலும் இவ்விளையாட்டு 'குலிகா' என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள தெருக்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் இவ்விளையாட்டு, பிராந்தியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 'கிட்டி புல்' அல்லது 'கிட்டி புள்ளு' என்று அழைக்கப்படும் இவ்விளையாட்டு, மகாராஷ்டிராவில் 'விட்டித்தண்டு', கர்நாடகாவில் 'சின்னிதண்டு', ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 'கூட்டி பில்லா', கேரளாவில் 'குட்டியும் கோலும்', மேற்குவங்கம் மற்றும் அசாமில் 'டாங்குலி', பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 'கில்லி தண்டா', ஒடிசாவில் 'குலிபாடி' எனப் பல பெயர்களில் மக்களால் விளையாடப்பட்டு வருகிறது. பெயர்கள் மாறினாலும், இதன் ஆட்ட விதிகளும் உத்தியும் நாடு முழுவதும் ஒன்றாகவே இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
காலப்போக்கில் நவீன அலைபேசிகளின் வருகையால் நம் ஊர் தெருக்களில் சற்றே மங்கிப்போன இந்த விளையாட்டு, தற்பொழுது சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்று உலகளாவிய விளையாட்டாக உருவெடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் சமீபகாலமாக இதன் தனித்துவமான ஆட்ட முறையைக் கவனித்து, இதன் மீது மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் இது பல்வேறு பெயர்களில் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 'பீ-வீ' (Pee-Wee) அல்லது 'டிப்-கேட்' (Tip-Cat) என்றும், இத்தாலியில் 'லிப்பா', ஸ்பெயினில் 'பில்ஹார்டா', போலந்தில் 'கிளிப்பா', மலேசியாவில் 'கொண்டா கொண்டி' என்றும் இது அழைக்கப்படுகிறது.
இவ்விளையாட்டை உலகத்தரம் வாய்ந்த ஒரு முறையான போட்டியாக மாற்றும் நோக்கில், 'கில்லி தண்டா சர்வதேச கூட்டமைப்பு' (International Gilli Danda Federation) தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் பல வெளிநாடுகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. இதன் விளைவாக, சாதாரணத் தெருக்களில் விளையாடப்பட்ட கிட்டி புல், இன்று முறையான சர்வதேச விதிகள், பிரத்யேக ஜெர்சி ஆடைகள் மற்றும் தொழில்முறைப் போட்டிகளுடன் உலக அரங்கில் கம்பீரமாக நடைபோடுகிறது.
அதேவேளையில், சமூக வலைதளங்களில் இவ்விளையாட்டின் வீடியோக்கள் வைரலாகி வரும் சூழலில், இதன் உண்மையான பூர்வீகம் குறித்தும், எந்த நாடு இதற்கு உரிமை கொண்டாட முடியும் என்பது குறித்தும் இணையவாசிகளிடையே தற்பொழுது காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், நம் மண்ணின் விளையாட்டு உலகளவில் அங்கீகரிக்கப்படுவது நமக்கு பெருமிதமான தருணமாகும்.
English Summary
From Village Streets to the Global Arena The International Rise of 2500 Year Old Gilli Danda