கோவை மாணவி தற்கொலை; ''நீட் தேர்வால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்..?'' மத்திய அரசை சாடியுள்ள பெ.சண்முகம்..!
P Shanmugam lashes out at the Central Government asking how many more lives will be lost due to the NEET exam
கோவை மாவட்டம், பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த அனு கீர்த்தனா என்ற மாணவி, நீட் வினாத்தாள் கசிவு, அதனால் ஏற்பட்ட மறுதேர்வு அழுத்தம் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவை மாணவியின் தற்கொலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் மத்திய அரசை கடுமையா விமர்சித்துள்ளார். அதாவது ''நீட் தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ள ஒன்றிய அரசு, நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கத் தவறி, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
''கோவை மாவட்டம், பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த அனு கீர்த்தனா என்ற மாணவி, 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை எழுதி வந்தார்.
நீட் வினாத்தாள் கசிவு, அதனால் ஏற்பட்ட மறுதேர்வு அழுத்தம் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த மாணவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
ஏற்கெனவே, நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதால் ஏற்பட்ட அழுத்தம், மருத்துவக் கனவு தள்ளிப்போனதற்கான வருத்தம், நீட் தேர்வு ரத்தான பின்னணியில் மன அழுத்தமாகியுள்ளது. தனது மனநிலை பற்றிய தகவலை அவர் தனது சித்தப்பாவுக்கு செய்தியாகவும் அனுப்பியுள்ளார். பல சாதனைகளைச் செய்ய வேண்டிய வயதில் அனு கீர்த்தனாவை இழந்திருப்பது அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீட் தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ள ஒன்றிய அரசு, நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கத் தவறி, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முற்றாக விலக்குப் பெற வேண்டும், ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழலில், ஒன்றிய அரசு இந்த கோரிக்கைகளின் நியாயங்களை ஏற்று நீட் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மாணவி அனு கீர்த்தனாவை இழந்து வாடும் சி.ஐ.டி.யு. டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில் பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவ, மாணவிகள் இனி இத்தகைய துயரமான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று வேண்டி கேட்டுக் கொள்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
P Shanmugam lashes out at the Central Government asking how many more lives will be lost due to the NEET exam