IPL தொடக்க விழாவை திடீரென ரத்து செய்த BCCI..! கிரிக்கெட் ரசிகர்கள் ஷாக்..காரணம் தெரியுமா..?
BCCI suddenly cancels IPL opening ceremony
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடக்க விழாவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த RCB வெற்றி ஊர்வல நெரிசலில் உயிரிழந்த 11 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் என்பது ரசிகர்களின் உணர்வுகளுடன் இணைந்த விளையாட்டு என்றாலும், மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவை BCCI எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து பெங்களூருவில் நடத்தப்பட்ட வெற்றி ஊர்வலத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த துயர சம்பவத்தை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டு IPL தொடக்க விழாவை எந்தவித பிரம்மாண்ட நிகழ்ச்சிகளும் இல்லாமல் நடத்த BCCI முடிவு செய்துள்ளது.
IPL 2026 சீசன் மார்ச் 28-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் RCB மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு சோக சம்பவம் நடந்த அதே நகரத்தில் இந்த சீசன் தொடங்குவதால், தொடக்க விழாவை எளிமையாக நடத்துவது சரியான முடிவு என BCCI கருதியுள்ளது.
இதற்கிடையில், IPL 2026 இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஒரு பிரம்மாண்ட நிறைவு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மே 31-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டி நாளில் அந்த விழா நடைபெற வாய்ப்பு இருப்பதாக BCCI செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
IPL தொடக்க விழா ரத்து செய்யப்படுவது இது முதல் முறையல்ல. 2019-ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு, அதற்கான நிதி வீரமரணம் அடைந்த CRPF வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு IPL தொடக்க விழா கொல்கத்தாவில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. அதில் ஷாருக் கான், ஷ்ரேயா கோஷல், திஷா பதானி, கரண் அவுஜ்லா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் இந்த முறை IPL எந்த ஆரவாரமும் இல்லாமல், மரியாதை மற்றும் உணர்வுடன் தொடங்குகிறது.
BCCI-யின் இந்த முடிவு, “விளையாட்டை விட மனிதாபிமானமே முக்கியம்” என்ற தெளிவான செய்தியை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மார்ச் 28 அன்று தொடங்கும் IPL 2026 சீசனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
English Summary
BCCI suddenly cancels IPL opening ceremony