தினம் ஒரு திருத்தலம்.. ஏகதள விமானம்.. மூஷிக வாகனம்.. அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை என்னும் ஊரில் அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 72 கி.மீ தொலைவில் உடுமலைப்பேட்டை என்னும் ஊர் உள்ளது. உடுமலைப்பேட்டையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில் ராஜகம்பீர கோலத்தில் ஏகதள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தலத்தில் மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் இக்கோயிலின் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது.

கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசிவிஸ்வநாதர், மூலவர் இடத்தில் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். காசிவிஸ்வநாதருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி அருள்பாலிக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

இத்தலத்தில் தம்பதி சமேதராக முருகன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இக்கோயிலின் முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுர நாயகி உடனாய சௌரிராஜப்பெருமாள், அவருக்கு இடப்புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

மாதக்கிருத்திகை தினத்தில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது இக்கோயிலின் மிகச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

தேவ விருட்சங்களான வன்னி, வில்வம், அரசு ஆகியன இத்தலத்தில் அமைந்துள்ளன.

இத்தலம் மும்மூர்த்திகள் அமைந்த தலமாக திகழ்கிறது. இங்கு நெய்வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

அரைச் சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரபுரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை மற்றும் ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் கொழுக்கட்டை நெய்வேத்தியம் படைத்தும், பால் அபிஷேகம் செய்தும், சூரைத்தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today special prasanna vinayagar temple


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->