1 கோடி ராமநாமம்... பரிவாரங்களுடன் ஆஞ்சநேயர்.. அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்.!
Today special Anjali varadha Anjaneyar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி என்னும் ஊரில் அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் சின்னாளபட்டி என்னும் ஊர் உள்ளது. சின்னாளபட்டியிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்களால் எழுத பெற்ற 1 கோடி ராமநாம ஜெபம் சேர்க்கப்பட்டுள்ளது.
இதை ஒரு முறை சுற்றி வந்தால் சுந்தரகாண்டத்தையே பாராயணம் செய்த பலனும், ராமநாம ஜெபத்தை 1 கோடி தடவை உச்சரித்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் 16 அடி உயரம் கொண்டும், கதாயுதத்துடனும் காட்சியளிக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
இத்திருக்கோயிலில் ஆஞ்சநேயர் ராஜாவாக விளங்குவதால் மகாமண்டபத்தில் அவரது பரிவாரங்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜுவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
கோயிலின் சுற்றுப்பகுதியில் செல்வத்தின் அதிபதியான லட்சுமியும், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியும் அருள்பாலிக்கிறார்கள்.
அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ராமர், சீதா, லட்சுமணர் சிலைகளும் சன்னிதானத்தில் உள்ளது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சித்திரை மாதப்பிறப்பன்று பத்தாயிரம் கனி அலங்காரமும், ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரமும் நடைபெறும்.
இத்தலத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும். அப்போது பஞ்சசூக்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அனுமசகஸ்ர நாமாவளி யாகம் ஆகியவை செய்யப்படும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
சனிப்பெயர்ச்சி காலங்களில் இவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷ பாதிப்பு குறையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்திருக்கோயிலில் வேண்டியவை நிறைவேறியவுடன் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
English Summary
Today special Anjali varadha Anjaneyar temple