மாதாந்திர பூஜை - சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.!!
sabarimalai ayyappan temple gate open for monthly poojai
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படும். அப்போது சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவார்கள். அந்த வகையில், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

கோவில் நடையை தந்திரிகள் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து தீபாராதனை நடத்துகிறார். அதனைத்தொடர்ந்து பதினெட்டாம் படியின் கீழ் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படுகிறது. நடை திறக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. அரிவராசனம் பாடப்பட்ட பிறகு, இரவில் நடை சாத்தப்படும்.
பின்பு நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். மேலும், நாளை இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். இந்த மாதாந்திர பூஜை வருகிற 19-ந்தேதி வரை நடைபெறவுள்ளதால், அன்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். அன்றைய தினம் இரவு மாதாந்திர பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
English Summary
sabarimalai ayyappan temple gate open for monthly poojai