அதென்ன நவாம்சம்... இது புதுசா இருக்கே?... வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
navamsam
கோச்சாரம் :
பரந்து விரிந்த வான் மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அங்கு உள்ள கிரகங்களின் நிலைகளை பற்றி அறிந்துகொள்ள உதவுவது கோச்சாரம்.
ஒரு குழந்தை பிறக்கின்ற நேரத்தில் வான் மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் விதி அமைகிறது.
ஒவ்வொருவரது ஜாதகத்திலும் இந்த விதிப்படி ஒரு சில கிரகங்கள் பாதகமாகவும் (தீமை பயக்கும் கிரகங்களாகவும்), மற்ற கிரகங்கள் சாதகமாகவும் (நன்மை பயக்கும் கிரகங்களாகவும்) அமைகின்றது.
அதாவது, ஒருவர் பிறந்த நேரப்படி பாதகமான நிலையில் உள்ள கிரகங்கள் தீமையான பலன்களையும், சாதகமான நிலையில் உள்ள மற்ற கிரகங்கள் நன்மையான பலன்களையும் அளிக்கும்.
வேகமாக சுற்றும் கிரகம் :
வேகமாக சுற்றும் (நகரும்) கிரகங்களான சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் கோச்சாரத்தில் எப்படி இருந்தாலும் அதற்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் பாதிப்பினை உண்டாக்காது.
இது போன்ற கிரகங்களுக்கு வகுக்கப்பட்ட காரகங்களின் பலன்களை காண ஒருவரின் விதியை மட்டும் ஆய்வு செய்தால் போதும்.
மெதுவாக சுற்றும் கிரகம் :
அதேசமயம் மெதுவாக சுற்றும் (நகரும்) கிரகங்களான குரு, ராகு, கேது மற்றும் சனி கோச்சாரத்தில் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் நட்சத்திரத்தில் செல்லும் பொழுது அதற்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் நிச்சயம் சிறிதளவாவது தடையினை ஏற்படுத்தும்.
ஆனால், இந்த கோச்சாரத்தால் ஏற்படும் தடை என்பது சிறிதளவாகத்தான் இருக்குமே தவிர பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது.
நவாம்சம் :
நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம், அதன் எந்த பகுதியில் உள்ளது? என்பதைக் காட்டுவது ஆகும்.
உண்மையில் ராசி சக்கரம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம் ஆகும். நவாம்சம் என்பது அதனுடைய நிழல்தான் என்று கூறலாம். ஒரு கிரகத்திற்கு கிடைத்திருக்கும் சுப, அசுப வர்க்கங்களை கணிக்க மட்டுமே நவாம்சம் சொல்லப்பட்டது. அதில் கிரகங்களுக்கு பார்வை இல்லை. மறைவு ஸ்தானங்களும் இல்லை. ஆனால் சேர்க்கை வர்க்கோத்தமம் போன்றவைகள் உண்டு.
ராசி சக்கரம் எனும் உண்மை நிலையில் மட்டுமே கிரகங்களுக்கு பார்வை உண்டு. நவாம்சம் என்பது ராசி சக்கரத்தை ஒன்பதின் மடங்கில் பிரித்து எந்த கிரகம், எங்கே? எந்த துல்லிய நிலையில் சுபத்துவ, பாபத்துவ அமைப்பில் இருக்கிறது? என்று பார்க்க உதவுகிறது.
மேலும் நவாம்சத்தை வைத்து திருமண வாழ்க்கையை பற்றிய துல்லியமான பலன்களை கூறமுடியும்.
கிளி ஜோதிடம் :
கிளி ஜோதிடம் என்பது ஜோதிடத்தில் பலன் உரைக்கும் முறைகளில் ஒரு வகையான பிரசன்ன மார்க்கமாகும்.
கிளியின் முன்னால் சீட்டுகள் அடுக்கப்பட்டு இருக்கும். கிளி அந்த சீட்டிலிருந்து ஏதாவது ஒரு சீட்டை எடுக்கிறது. அந்த சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரமானது அவருடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அவரோடு தொடர்புடையதாகவே இருக்கக்கூடும்.