கோலாகலமாகத் தொடங்கிய மாசித் திருவிழா - திருச்செந்தூரில் இன்று கொடியேற்றம்.!
masi function flag hoisting in thiruchenthur murugan temple
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா புதன் கிழமையான இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
இந்தக் கொடியேற்ற விழாவை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
![](https://img.seithipunal.com/media/thiruchenthur flag festival 1-j84xd.png)
இதைத் தொடர்ந்து கொடிப்பட்டத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் குளத்துமணி அய்யர் கோவில் யானை மீது அமர்ந்து பிடித்தவாறு கொடிப்பட்டம் எட்டு வீதிகளிலும் உலா வந்தது.
இந்த நிலையில், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள கொடி மரத்திற்கு பால், மஞ்சள், விபூதி, தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மாசித்திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது.
இந்தக் கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா என்று கூறி சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 12 நாட்கள் நடக்கும் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருசெந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவின் முக்கியமான நிகழ்ச்சியான மாசித் தேரோட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.
English Summary
masi function flag hoisting in thiruchenthur murugan temple