இன்று... மாசி அமாவாசை... காலை முன்னோர் வழிபாடு... மாலை குலதெய்வ வழிபாடு.!!
masi amavasai
மாசி மாதம் என்பது மகத்தான மாதம். மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதத்தில் இஷ்ட தெய்வங்களை வணங்குவதும், குலதெய்வங்களை வணங்குவதும் அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும்.
மாசி மாதத்தில் முன்னோர் வழிபாடு செய்வதும் அவர்களுக்குப் படையலிடுவதும் நம் குலத்தைக் காக்கும். குடும்பத்தை மேம்படுத்தும். சந்ததியைச் சிறக்கச் செய்யும் என்கிறது சாஸ்திரம்.
முன்னோர் வழிபாடு என்பதும், குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக முக்கியம். முன்னோர்களுக்கு ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்கள் என 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.
மாசி மாதத்தின் அமாவாசையான இன்று, முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, அலங்கரித்து, நமஸ்கரித்து குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து எள்ளும், தண்ணீரும் விடவேண்டும்.
அதேபோல், மாலையில் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வப் படத்துக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து, குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு, புடவை, ஜாக்கெட், பழங்கள், மங்கலப் பொருட்கள் வைத்து வணங்க வேண்டும். அந்தப் புடவை முதலான மங்கலப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும், சந்தோஷமும் குடிகொள்ளும்.
சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்நாளில் அமாவாசையும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு. முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்த நாளில், மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்து காகத்துக்கு உணவிட்டு முன்னோர்களின் ஆசியை பெறுவோம்.