திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுமா...? ஆத்தூரின் அரிய தலம் தலையாட்டி கணபதியை இவ்வாறு வணங்குங்கள்...!
Do you want get married and children Worship Lord Ganapati this way rare shrine Attur
எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் முதலில் விநாயகரை வணங்குவது நம் தமிழர் மரபு. “விநாயகரை வணங்கினால் வெற்றி உறுதி” என்ற நம்பிக்கைக்கு உயிரூட்டும் தலம் தான் தலையாட்டி விநாயகர் ஆலயம்.ஆத்தூர் பகுதியில், சேலம் மாவட்டத்தின் இதயத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், பக்தர்களிடையே தனித்துவமான வரலாறாலும் அதிசயத்தாலும் பெரும் பக்திப்பரவலை பெற்றுள்ளது.

ஒருகாலத்தில் பல நதிகள் ஓடியதால் ‘ஆற்றூர்’ என அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் ‘ஆத்தூர்’ ஆனதாக தெரிவிக்கப்படுகிறது.புராணக் கதையின் படி, வசிஷ்ட முனிவர் இப்பகுதியில் தவம் செய்து பல இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தார்.
அவரின் தவப்பலனாக சிவபெருமான் ஜோதி வடிவில் அருள்காட்டியதாகவும், பின்னர் அந்த லிங்கம் மண்ணில் புதைந்ததாகவும் நம்பப்படுகிறது.பல ஆண்டுகள் கழித்து, சிவபக்தனான ஒரு மன்னனின் கனவில் இறைவன் தோன்றி, “நான் இத்தலத்தில் புதைந்து இருக்கிறேன்; எனக்கு கோவில் எழுப்பு” என உத்தரவிட்டாராம். மன்னன் தோண்டியபோது சிவலிங்கமும் புதையலும் கிடைத்தது.
அந்த செல்வத்தைக் கொண்டு கோவில் கட்டத் தொடங்கிய அவர், முதலில் விநாயகரிடம் அனுமதி பெற்று பணியை ஆரம்பித்தார்.கோவில் கட்டுமானம் வெற்றிகரமாக முடிந்தபின், “நன்றாக கட்டியுள்ளேனா?” என்று மன்னன் கேட்டபோது, விநாயகர் ‘ஆம்’ என்று தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தாராம்.
அதுவே இங்கு எழுந்தருளியிருக்கும் கணபதிக்கு ‘தலையாட்டி விநாயகர்’ என்ற பெயரை அளித்தது.இன்றும் இந்த விநாயகர் சிலை சற்று இடப்புறமாக தலையை சாய்த்தபடி அருள்பாலிப்பது பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
‘காவல் கணபதி’ என போற்றப்படும் இவர், வேண்டிய காரியங்கள் வெற்றியடையும் வரை நம்முடன் இருந்து காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.திருமணத் தடை நீங்க, குழந்தைப் பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் விலக – பலரும் இத்தலத்திற்கு வந்து விருப்பப் பூஜைகள் செய்கின்றனர்.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசனம் செய்யலாம். ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த ஆலயம், பக்தர்களை ‘தலையாட்டி’ வரவேற்க காத்திருக்கிறது.
English Summary
Do you want get married and children Worship Lord Ganapati this way rare shrine Attur