திருப்பதி பெருமாளுக்கு பச்சை கற்பூரம் சாற்றுவது ஏன் தெரியுமா..?!
Do You know The Reason Behind The Green Camphor on Tirupati perumal Jaw
உலகின் மிகப் பணக்கார கடவுளான ஏழுமலையானின் தாடையில் எப்போதும் பச்சை கற்பூரம் சாற்றப் பட்டிருக்கும். அதற்கான காரணம் என்னவென்று பலருக்குத் தெரியாது. அந்த ரகசியத்தை இப்போது பார்ப்போம். ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார் தனது கர்ப்பிணி மனைவியுடன் திருமலை சென்று, திருப்பதியில் பெருமாளுக்காக ஒரு தோட்டம் அமைத்தார்.
அப்போது தோட்டத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்க ஒரு குளத்தையும் தன் கர்ப்பிணி மனைவியோடு சேர்ந்து வெட்டினார். அப்போது பெருமாளே ஒரு சிறுவனின் உருவில் வந்து அனந்தாழ்வாருக்கு குளம் வெட்ட உதவ முன்வந்தார். இதையறியாத ஆழ்வார், பெருமாளின் சேவை தனக்கு மட்டுமே உரியது என்று கூறி சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.

இதையடுத்து அந்த சிறுவன், ஆழ்வாருக்குத் தெரியாமல் அவரது மனைவிக்கு உதவியுள்ளார். இதைக் கண்டு கோபமடைந்த ஆழ்வார், சிறுவனின் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் வந்துள்ளது. பின்னர் சிறுவன் சென்ற பிறகு, அவனை அடித்து விட்டோமே என்று வருந்திய ஆழ்வார், பெருமாளை பார்க்க கோவிலுக்குச் சென்றபோது, அங்கு பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து தனக்கு உதவ சிறுவனாக வந்தது பெருமாள் தான் என்பதை உணர்ந்த ஆழ்வார், பெருமாளிடம் மன்னிப்பு கேட்டதோடு, பச்சைக் கற்பூரத்தைக் கொண்டு ரத்தத்தையும் நிறுத்தியுள்ளார். இது தான் இப்போதும் பெருமாள் பச்சைக் கற்பூரத்துடன் காட்சி தருவதற்கு காரணம்.
மேலும் அனந்தாழ்வார் வெட்டிய குளம் இன்றளவும் 'அனந்தாழ்வார் குளம்' என்ற பெயரில் திருப்பதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Do You know The Reason Behind The Green Camphor on Tirupati perumal Jaw