தினம் ஒரு திருத்தலம்... திருநீற்றான் திருமதில்... விபூதி பிரகாரம்...!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் :

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் நீர் (அப்பு) தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.

கோயில் சிறப்பு :

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

குபேரன் பூஜித்த குபேர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது. ஆனி பௌர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.

சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் 'அகிலாண்டேஸ்வரி" என்றழைக்கப்படுகிறாள்.

ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். 

ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.

சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பௌர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.

சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து கட்டிய மதில் 'திருநீற்றான் திருமதில்" என்றும், பிரகாரம் 'விபூதி பிரகாரம்" என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.

இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால் பள்ளியறை இருக்கிறது.

இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் திருவிழா :

பங்குனியில் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை :

கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்;து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arulmiga jambukeswarar temple


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal