டிட்வா புயல் தாக்கிய இலங்கைக்கு இந்தியா ரூ.4,041 கோடி உதவி...! - ஜெய்சங்கர் அறிவிப்பு
India provides 4041 crore aid Sri Lanka which hit by Cyclone ditwah Jaishankar announces
இலங்கையை இந்த மாத தொடக்கத்தில் தாக்கிய ‘டிட்வா’ புயல், அந்த தீவுநாட்டையே பெரும் பேரழிவில் தள்ளியது. புயலுடன் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்து, இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உறவுகளையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்தனர்.

ஏற்கனவே நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக தவித்து வந்த இலங்கை, புயல் தாக்குதலால் மேலும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது.இந்த நிலையில், புயல் பாதிப்பில் இருந்து இலங்கை மீண்டு எழுவதற்காக சர்வதேச நாணய நிதியம் (IMF) அவசர நடவடிக்கையாக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்) நிவாரண நிதியை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், இலங்கையின் மறுகட்டமைப்புக்கு உதவுவதற்காக இந்தியா ரூ.4,041 கோடி (450 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் அனுர திசாநாயக்கவை நேரில் சந்தித்து தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில்,“இன்று கொழும்பில் அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி. டிட்வா புயலுக்குப் பிந்தைய மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த செய்தியையும் அவரிடம் பகிர்ந்தேன்.
‘ஆபரேஷன் சாகர்பந்து’ திட்டத்தின் கீழ், இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் மறுகட்டமைப்பு உதவி வழங்க இந்தியா உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
India provides 4041 crore aid Sri Lanka which hit by Cyclone ditwah Jaishankar announces