நீங்கள் மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறீர்கள்...! - வேலுமணியின் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை...!
You very generous Velumani speech caused laughter assembly
சட்டசபையில் 6 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. தனது உரையை தொடங்கிய அவர், “மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார்” எனக் குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை நினைவுகூர்ந்து பாராட்டு தெரிவித்தார்.

கட்சிக்குள் நிலவி வந்ததாக கூறப்படும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி குறித்து வேலுமணி வெளிப்படையாக புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், “அம்மா உணவகம் உள்ளிட்ட அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் அறிவித்துள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” என்றார்.மேலும், தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த பலரும் தற்போதும் அதே அதிகாரப் பொறுப்புகளில் தொடர்வதாகவும், திறமையான அதிகாரிகளுக்கு உரிய பணிகளை வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின், “அவர் எந்தக் கட்சி சார்பில் பேசுகிறார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர், “அவர் அதிமுக என்று தான் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என பதிலளித்தார். இதற்கு விளக்கம் அளிக்க எஸ்.பி.வேலுமணி எழுந்தபோது, “வேண்டாம்... நான் கூறிவிட்டேன்” என சபாநாயகர் கூறி அவரை அமரச் செய்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய வேலுமணி, “தி.மு.க. ஆட்சியில் நாங்கள் வாய்ப்பு கேட்கும்போது கொடுக்கமாட்டார்கள். நீங்கள் மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறீர்கள்” என சபாநாயகரை பாராட்டிப் பேசினார். அவரது இந்த கருத்தை கேட்ட முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிரித்தனர்.
தனது வெற்றிக்கு ஆதரவாக பணியாற்றிய கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்தார். குறிப்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் ஒத்துழைப்பை அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், மாவட்டத்தின் தற்போதைய தேவைகள் குறித்தும் சட்டசபையில் கோரிக்கைகளை முன்வைத்தார்.
கோவை மாவட்டத்தில் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, உரிய அனுமதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதவிர, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.
English Summary
You very generous Velumani speech caused laughter assembly